குடும்ப தகராறில் பெண் படுகொலை; கணவர் கைது


குடும்ப தகராறில் பெண் படுகொலை; கணவர் கைது
x
தினத்தந்தி 23 April 2022 8:58 PM IST (Updated: 23 April 2022 8:58 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் குடும்ப தகராறில் கத்தியால் குத்தி பெண்ணை படுகொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு:

குத்திக்கொலை

  பெங்களூரு தலகட்டபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகேகவுடனபாளையா பகுதியை சேர்ந்தவர் மாரப்பா. விவசாயி. இவரது மனைவி பத்மா (வயது 45). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். பத்மா ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாரப்பா சரியாக விவசாயத்தை கவனிக்காமல் தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பத்மாவிடம் தகராறு செய்து வந்து உள்ளார்.

  இதனால் அவர்களிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மாரப்பா, பத்மாவிடம் தகராறு செய்து உள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு உண்டானது. அப்போது ஆத்திரம் அடைந்த மாரப்பா, பத்மாவை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் வயிற்றில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த பத்மா பரிதாபமாக இறந்தார்.

கைது

  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாரப்பா தப்பி சென்று விட்டார். இதற்கிடையே வெளியே சென்று இருந்த மகன்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது பத்மா பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன்கள், தலகட்டபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் பத்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  விசாரணையில் குடும்ப தகராறில் பத்மாவை, மாரப்பா கொன்றது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தலகட்டபுரா போலீசார் தலைமறைவாக இருந்த மாரப்பாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story