77 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது


77 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 April 2022 9:08 PM IST (Updated: 23 April 2022 9:08 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், 77 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

  பெங்களூரு தலகட்டபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக வீடுகள், வாகன நிறுத்தங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கார்களின் கண்ணாடிகளை உடைத்து கார்களுக்குள் இருக்கும் மடிக்கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை ஒரு கும்பல் திருடி வந்தது.

  இதுகுறித்த புகார்களின்பேரில் போலீசார் மர்மநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் தலகட்டபுரா போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகம்படும்படியாக சுற்றிய ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் பெயர் அபுபக்கர் சித்திக் என்கிற சித்திக் (வயது 35) என்பதும், அவர் மைசூருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தற்போது பெங்களூருவில் பன்னரகட்டா சாலையில் வசித்து வரும் சித்திக் இரவு நேரங்களில் கார்களின் கண்ணாடிகளை உடைத்து கார்களுக்குள் இருக்கும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் கள்ளச்சாவியை பயன்படுத்தி இருசக்கர வாகனங்களையும் திருடியதும் தெரியவந்தது. இதனால் அவரை போலீசார் கைது செய்தனர்.

  அவர் கொடுத்த தகவலின்பேரில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 5 இருசக்கர வாகனங்கள், 9 மடிக்கணினிகள், 2 கேமராக்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், ரூ.65 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்மதிப்பு ரூ.11½ லட்சம் ஆகும். கைதான சித்திக் பெங்களூரு நகரில் மட்டும் 77 திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி இருந்தது தெரியவந்தது. சித்திக் கைதாகி இருப்பதன் மூலம் தற்போது 77 திருட்டு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

Next Story