சூறாவளி காற்றுடன் பலத்த மழை
முத்தூர் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
முத்தூர்
முத்தூர் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
கோடைவெயில்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கடும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர், கோவை, ஈரோடு உட்பட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மாலை, இரவு நேரங்களில் சாரல், மிதமான, பலத்த மழை பெய்யக்கூடும் என நேற்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கடும் கோடை வெயில் சுட்டெரித்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை 5.30 மணிக்கு மேல் வானத்தில் கருமேகங்கள் அதிக அளவில் சூழ்ந்து பலத்த மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது.
சூறாவளி காற்றுடன் மழை
இதனை தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணிக்கு நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் முத்தூர் நகரப்பகுதிகளில் வர்த்தக நிறுவனங்களின் முன்பு வைக்கப்பட்டிருந்த நிறுவனங்களின் பெயர்கள் எழுதிய இரும்பு பலகைகள், பிளக்ஸ் தட்டிகள் காற்றின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சாய்ந்து கீழே விழுந்தன.
இதனை தொடர்ந்து மாலை 6.45 மணிக்கு லேசான சாரலுடன் மிதமான மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் மிதமான நிலையிலேயே பெய்ததால் நேற்று மாலை நேரத்தில் முத்தூர் வாரச்சந்தைக்கு காய்கறிகள், மளிகை சாமான்கள், பழங்கள், கீரைகள் உட்பட பல்வேறு பொருள்கள் வாங்க வந்த நகர, கிராம பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்படைந்தனர்.
Related Tags :
Next Story