வெள்ள அபாயத்தை தடுக்க ஆறு, ஓடைகள் முறையாக தூர்வாரப்படுமா
திருப்பூர் மாநகர பகுதியில் வெள்ள அபாயத்தை தடுக்க ஆறு, ஓடைகள் முறையாக தூர்வாரப்படுமா? என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திருப்பூர்
விவசாயத்தை காப்பதற்கும், வெள்ள அபாயத்தை தவிர்க்கவும் நம் முன்னோர்கள் ஆறு, குளம், ஏரி, ஓடைகள் உள்ளிட்டவற்றை உருவாக்கினார்கள். ஆனால், பல இடங்களில் தற்போது நீர்த்தேக்கம் மற்றும் நீர்வழிப்பாதைகள், நீராதாரங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளன. அந்த வகையில் திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள நொய்யல் ஆறு மற்றும் ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை ஆகியவை சரியான பராமரிப்பின்றி உள்ளன.
இதில் ஆறு மற்றும் ஓடைகள் மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தூர்வாரப்படுகிறது. ஆனால், தூர்வாரப்படும் போது ஆறு, ஓடைகளில் இருந்து அள்ளப்படும் மண், குப்பைகள் சரியான முறையில் அப்புறப்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலான இடங்களில் இந்த மண் மற்றும் குப்பைகள் ஆறு, ஓடைகளின் உள்ளேயே ஓரமாக கொட்டி வைக்கப்படுகின்றன.
வருவாய் இழப்பு
பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஜம்மனை ஓடையில் ஏற்கனவே தூர்வாரப்பட்ட மண் மற்றும் குப்பைகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படாமல் ஓடையின் உள்ளேயே கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், சங்கிலிப்பள்ளம் ஓடையில் தூர்வாரப்பட்ட மண்ணும் தாராபுரம் ரோடு, புதுக்காடு ஆகிய பகுதிகளில் ஓடையின் ஓரத்தில் மலை ேபால் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்த மண் ஓடையில் பாயும் தண்ணீரால் கொஞ்சம் ெகாஞ்சமாக அரிக்கப்படுகிறது.
மேலும், மழைக்காலங்களில் பெருமளவில் மண் அரிக்கப்பட்டு ஓடைக்குள் செல்கிறது. இவ்வாறு இந்த மண் ஓடையில் தேங்கி விடுகிறது. இது போன்ற நிகழ்வு திருப்பூர் மாநகர பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. இவ்வாறு முறையற்ற வகையில் ஆறு, ஓடைகள் தூர்வாரப்படுவதால் ஒரு முறை அள்ளப்பட்ட மண்ணை மீண்டும், மீண்டும் ஓடையில் இருந்து தூர்வார வேண்டிய அவலம் உள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு தூர் வாரும் பணிக்காக பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதோடு கால விரயமும் ஏற்படுகிறது.
வெள்ள அபாயம்
இது மட்டுமின்றி ஓடைகளில் மண் தேங்கி கிடப்பதால் ஓடையின் பரப்பளவு குறைந்து விடுகிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் வெள்ளம் அதிகமாக வரும்போது மழை வெள்ளம் சீராக பாய்ந்து செல்வதற்கு வழியின்றி வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. திருப்பூரில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பலர் உயிரிழந்த துயர சம்பவம் இன்னமும் திருப்பூர் மக்கள் நெஞ்சை விட்டு நீங்காமல் உள்ளது. இந்த சம்பவத்தின் பின்னர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பல வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. ஆனால் தூர்வாரும் பணி சரியான திட்டமிடல் இன்றி உள்ளது.
எனவே சங்கிலிப்பள்ளம், ஜம்மனை ஓடைகளின் உள்ளே கொட்டி வைக்கப்பட்டுள்ள மண்ணை முறையாக அப்புறப்படுத்தவும், நொய்யல் ஆற்றில் ஆங்காங்கே காடு போல வளர்ந்து நிற்கும் செடிகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். திருப்பூரில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே வெயில் காலம் என அலட்சியமாக இல்லாமல் இனியாவது ஆறு, ஓடைகளை முறையாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
Related Tags :
Next Story