முக கவசத்தை முற்றிலும் மறந்ததால் தொற்று பரவும் அபாயம்


முக கவசத்தை முற்றிலும் மறந்ததால் தொற்று பரவும் அபாயம்
x
தினத்தந்தி 23 April 2022 9:46 PM IST (Updated: 23 April 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

முக கவசத்தை முற்றிலும் மறந்ததால் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா.... இந்த வார்த்தையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டதும் மக்கள் நடுங்கி கிடந்ததுடன் ஊரடங்கால் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். முககவசம் அணியாமல் வீதியில் வர வேண்டாம் என்றும், முககவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றால் ரூ.500 அபராதம் விதிப்பு என கடுமையான நடவடிக்கையை அதிகாரிகள் கடைபிடித்தனர். தொழிற்சாலைகள் கூட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கின. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் முற்றிலும் முடங்கி போயின. கடைகள் கூட நேரக்கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. வீதியில் நடமாடவே அனுமதிக்காத காலத்திலும் மக்கள் இருந்தனர்.
கொரோனாவின் உச்சகட்ட பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டன. அதுதவிர தற்காலிக கொரோனா மையங்களும் திருமண மண்டபங்கள், கல்லூரிகளில் அமைக்கப்பட்டன. ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு மாவட்டத்தில் 5-க்கு கீழ் குறைந்ததால் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள சிறப்பு வார்டுகள் என்பது கூட மாற்றியமைக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கொரோனா விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தது.
ரூ.500 அபராதம்
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இருந்த மக்களுக்கு கொரோனா பாதிப்பு குறைந்ததால் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டன. மக்கள் வழக்கமான வாழ்க்கைக்கு அடியெடுத்து வைத்து சகஜ நிலைக்கு திரும்பினார்கள். இந்தநிலையில் மாவட்டம் வாரியாக ஒற்றை இலக்க தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா வேகம் எடுக்க தொடங்கியிருக்கிறது.
தமிழக அளவில் கொரோனா தொற்று மெல்ல, மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மக்கள் முககவசம் அணிவதை முற்றிலும் விட்டு விட்டனர். முககவசம் அணியாமல் மற்றவர்களிடம் பேச கூட தயங்கிய மக்கள், தற்போது முககவசம் அணியாமல் வீதியில் சகஜமாக நடமாடி வருகிறார்கள். ஆனால் கொரோனா வேகமெடுக்க தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் மீண்டும் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். முககவசம் அணியாமல் பொது வீதியில் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
முககவசத்தை மறந்தனர்
பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில் வெளிமாநில, வெளிமாவட்ட மக்கள் அதிகம் உள்ளனர். வடமாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலமாக வெளிமாநிலத்தவர் வந்த வண்ணம் உள்ளனர். கொரோனா வேகமெடுக்கும் இந்த நேரத்தில் முககவசம் அணியாமல் வீதியில் மக்கள் சுற்றித்திரிவது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோவில்கள், சந்தைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் என்பதை மக்கள் முற்றிலுமாக மறந்து விட்டனர். இதனால் கொரோனாவின் பரவல் கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முககவசம் அணியுங்கள் என்று மாநகர காவல்துறை சார்பில் ஒலி பெருக்கி மூலமாக முக்கிய இடங்களில் நின்று மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் மக்கள் அதை கண்டுகொள்ளாமல் நடமாடி வருகிறார்கள். கொரோனா கோரதாண்டவம் ஆடியபோது திருப்பூரில் ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காமல் தவித்த மக்கள் ஏராளம். பஸ்களில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து சிகிச்சை அளித்த சம்பவமும் நடந்துள்ளது. இதை மக்கள் கவனத்தில் கொண்டு முககவசம் அணிவதை கண்டிப்பாக்க வேண்டும். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தயாராகும் கொரோனா வார்டு
இதுஒருபுறம் இருக்க அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டை தயார்படுத்தும் பணியில் டாக்டர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதுபோல் ஆக்சிஜன் சிலிண்டர் பராமரிப்பு, படுக்கை வசதிகளை தயார் செய்தல் போன்ற பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளனர். அதுபோல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாம்களை அதிகரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பாதுகாப்பு கவசம்
காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் முக்கிய பாதுகாப்பு கவசமாக முககவசம் உள்ளது. அதை மக்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகளின் விருப்பமாகும். இதற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து முககவசம் அணிந்து வீதியில் செல்லும் முறையை கடைபிடிக்க வேண்டும்.

Next Story