கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலை கிராம மக்களுக்கு மருத்துவ சேவை சென்றடைய வேண்டும் மாணவர்களுக்கு, அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுரை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராம மக்களுக்கும் மருத்துவ சேவை சென்றடைய வேண்டும் என்று மருத்துவ மாணவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை வழங்கினார்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராம மக்களுக்கும் மருத்துவ சேவை சென்றடைய வேண்டும் என்று மருத்துவ மாணவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை வழங்கினார்.
கல்வி கட்டணம்
கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் சேர்ந்த 10 மாணவ, மாணவிகளுக்கு ரூ.13 லட்சத்து 79 ஆயிரத்து 330 மதிப்பில் புத்தகம், கல்வி கட்டணம், போக்குவரத்து கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், கல்வி கட்டணம் உள்ளிட்டவற்றை வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, செல்லகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் டி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள மருத்துவக்கல்லூரி கிருஷ்ணகிரி மட்டுமல்லாது சுற்று வட்டாரத்தில் இருக்கும் மாவட்ட மக்களுக்கும் பயனாக இருக்கும். இந்த கல்லூரியில் சேர்க்கை என்பது 150 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டு முழு அளவு மாணவர் சேர்க்கையோடு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக அளவில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை தமிழகத்தில் மட்டும்தான். தன்னிறைவு பெற்ற கல்லூரியாக இந்த கல்லூரி அமைந்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு இங்கு மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் மருத்துவ தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ கட்டமைப்பாக மருத்துவ சேவை வழங்கப்பட உள்ளது.
மருத்துவ சேவை
இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்கள் கிருஷ்ணகிரியில் முதல் முதலாக தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் முதலாண்டு சேர்ந்த மாணவர்கள் என்ற பெருமை உங்களையே சாரும். மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. முதலாம் ஆண்டு முடிவு பெற்று 2-ம் ஆண்டு பயிற்சிக்காக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சிக்காக செல்லும் போது மலை கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு மருத்துவ சேவை புரியவேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராம மக்களுக்கும் மருத்துவ சேவை சென்றடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அமைச்சர்கள், முதலாம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ரோஜா மலர் வழங்கி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன், துணை முதல்வர் சாத்விகா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டி.செங்குட்டுவன், பி.முருகன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story