நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் முன்னாள் அமைச்சர் சரோஜா கணவருடன் ஆஜர்
நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் முன்னாள் அமைச்சர் சரோஜா கணவருடன் ஆஜர்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கணவருடன் ஆஜரான முன்னாள் அமைச்சர் சரோஜா கையெழுத்து போட்டு சென்றார்.
முன்னாள் அமைச்சர்
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சரோஜா. இவரும், இவருடைய கணவர் லோகரஞ்சனும் சேர்ந்து சத்துணவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 15 பேரிடம் ரூ.76½ லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாக ராசிபுரத்தை சேர்ந்த அவர்களது உறவினர் குணசீலன் என்பவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் சரோஜா, கணவர் லோகரஞ்சன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதை தொடர்ந்து கடந்த 20-ந் தேதி ராசிபுரம் கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் பெற்று கொண்டனர்.
கையெழுத்து போட்டனர்
மேலும் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மறுஉத்தரவு வரும் வரை இருவரும் கையெழுத்து போட வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை 10.30 மணி அளவில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் சரோஜா, கணவர் லோகரஞ்சன் ஆகிய இருவரும் துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமணன் முன்னிலையில் கையெழுத்து போட்டனர். அவர்களுடன் வக்கீல்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story