நீட் மசோதாவை கிடப்பில் போட்டுள்ள கவர்னர் பதவி தேவையா? ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி
சட்டமன்ற உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டு அனுப்பப்பட்ட நீட் மசோதாவை கிடப்பில் போட்டுள்ள கவர்னர் பதவி தேவையா என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்ளி எழுப்பி உள்ளார்.
விழுப்புரம்,
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு எழுதிய ‘நானும் நீதிபதி ஆனேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு அரசு சட்டக்கல்லூரி முதல்வர் கயல்விழி தலைமை தாங்கினார். நூலை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, வெளியிட அதை விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேசுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி அனுப்பப்பட்ட நீட் சட்ட மசோதா குறித்து ஒரு மாதம், 3 மாதம் கவர்னர் முடிவு எடுக்காமல் உள்ளார். இப்படி இருக்கும்போது கவர்னர் பதவி என்பது தேவையா? அப்படியானால் தமிழக அரசுக்கு என்னதான் அதிகாரம் இருக்கிறது? சட்டத்தை மீறி தங்கள் கொள்கைகளை, நினைப்பதை செயல்படுத்த பாசிச போக்குடன் செயல்படுகின்றனர். சட்டக்கல்லூரி மாணவர்கள், சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை பற்றியும், நீதிபதிகளை பற்றியும் விமர்சிக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் காக்கப்படும் என்றார். விழாவில் எழுத்தாளர்கள், பழங்குடி இருளர்கள், சட்டக்கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story