விதிமீறல் உரக்கடைகளுக்கு விற்பனை தடை
வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமீறல் உரக்கடைகளுக்கு விற்பனை தடை விதித்துள்ளனர்.
மதுரை,
வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமீறல் உரக்கடைகளுக்கு விற்பனை தடை விதித்துள்ளனர்.
விற்பனை தடை
மதுரை மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட போது விதிமீறல்களில் ஈடுபட்ட உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் சில்லறை உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் உர இருப்பு கிடங்குகள், கலப்பு உர உற்பத்தி நிறுவனங்களில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது உரம் இருப்பு, விலைப்பட்டியல் குறித்த தகவல் பலகை பராமரித்தல், உர விற்பனை உரிமங்கள், அனுமதி பெற்ற நிறுவனங்களிடம் இருந்து உரம் கொள்முதல் செய்யப் படுகிறதா, விற்பனை முனையக் கருவி மூலம் விற்பனை செய்தல், உரக் கட்டுப்பாடு சட்ட விதி மீறல்கள் எதுவும் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.
எச்சரிக்கை
இந்த ஆய்வின் போது விதிமீறல்களில் ஈடுபட்ட 18 சில்லறை உர விற்பனை நிலையங்களுக்கு 21 நாட்களுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டது. மேலும் 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஆய்வின் போது அதிகபட்ச சில்லறை விலைக்கு மிகாமல் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், இணை பொருட்கள் வாங்க வற்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story