சிங்கம்புணரி பகுதியில் ஒரே நாளில் 3 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா
சிங்கம்புணரி பகுதியில் நேற்று ஒரே நாளில் 3 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உற்சாகத்துடன் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி பகுதியில் நேற்று ஒரே நாளில் 3 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உற்சாகத்துடன் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
3 கண்மாய்களில்...
சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பட்டி பஞ்சாயத்து பிள்ளையார்பட்டியில் உள்ள முள்ளி கண்மாய், ஒடுவன் பட்டியில் வலையன் கண்மாய், கொடுங்குன்றம் கண்மாய் ஆகிய 3 கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடத்த அப்பகுதி கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஒரே நாளில் 3 கண்மாய்களிலும் மீன்பிடி திருவிழா நடந்தது.
சிங்கம்புணரியை சுற்றியுள்ள பிரான்மலை, முட்டாகட்டி, கிருங்கா கோட்டை, மேலப்பட்டி, புழுதிபட்டி, மேலவண்ணாருப்பு போன்ற பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் பல வகை வலைகளை கொண்டு மீன்பிடிக்க தயாரானார்கள்.
மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்
கண்மாய் கரையில் கிராமத்து முக்கியஸ்தர்கள் வெள்ளைக்கொடி காட்டியதும் மீன்பிடியாளர்கள் கண்மாய்க்குள் நுழைந்து போட்டி போட்டுக்கொண்டு மீன் பிடித்தனர். ஒரு சிலருக்கு மட்டுமே கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, கட்லா மீன்கள் கிடைத்தன. மீன்கள் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.
இந்த மீன்பிடி திருவிழாவில் ஒரு சிலருக்கு மீன்கள் கிடைக்கவில்லை. அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள். இரவு நேரத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் திருட்டுத்தனமாக மீன்களை பிடித்து சென்று விட்டதாக குற்றம் சாட்டினர். 3 கண்மாயிலும் குறைந்த பேருக்கு தான் மீன்கள் கிடைத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இருப்பினும் மீன்களை பிடித்தவர்கள், மீன் கிடைக்காதவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story