28 கி.மீ. தூரத்தை போட்டிப்போட்டு நீந்திய ஆந்திராவை சேர்ந்த 6 மாணவ-மாணவிகள்
தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே 28 கிலோமீட்டர் தூர கடல் பகுதியை ேபாட்டிப்போட்டு ஆந்திராவை சேர்ந்த 6 மாணவ-மாணவிகள் நீந்தி சாதனை படைத்தனர். அவர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டு குவிகிறது.
ராமேசுவரம்,
தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே 28 கிலோமீட்டர் தூர கடல் பகுதியை ேபாட்டிப்போட்டு ஆந்திராவை சேர்ந்த 6 மாணவ-மாணவிகள் நீந்தி சாதனை படைத்தனர். அவர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டு குவிகிறது.
28 கி.மீ. தூரம் நீந்தினர்
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த சாத்விக் (வயது 15), கிங்ஜார்ஜ் (16), ஜான்சன் (16), பிரணவ் ராகுல் (18) ஆகிய 4 மாணவர்களும், ஆலம்குர்தி (13) பேபிஸ்பந்தனா (19) ஆகிய 2 மாணவிகள் என மொத்தம் 6 பேர் ராமேசுவரம் வந்தனர். இவர்கள் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி வரையிலான 28 கிலோமீட்டர் தூர கடல் பகுதியை நீந்தி சாதனை படைக்க நேற்று முன்தினம் ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து நீச்சல் பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்களுடன் ஒரு விசைப்படகு மூலம் தலைமன்னார் பகுதிக்கு புறப்பட்டு சென்றனர்.
6 மாணவர்களும் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடியை நோக்கி நீந்த தொடங்கினார்கள். போட்டிப்போட்டு மிகுந்த உற்சாகத்துடன் 6 பேரும் நீந்தினார்கள்.
நேற்று காலை 10.25 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதி வரை நீந்தி கரை சேர்ந்தனர்.
9 மணி நேரத்தில் சாதனை
தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரையிலான 28 கிலோமீட்டர் தூர கடல் பகுதியை இந்த 6 மாணவர்களும் 9 மணி நேரம் 25 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளனர்.
6 மாணவர்களின் நீச்சல் சாதனையை கண்காணிப்பதற்காக மதுரை நீச்சல் பயிற்சியாளர் சங்க செயலாளரும் கண்காணிப்பாளருமான கண்ணன் சென்றிருந்தார்.
இதுகுறித்து ஆந்திர மாணவ-மாணவிகள் கூறியதாவது:-
தலைமன்னார் பகுதியில் இருந்து இந்திய கடல் எல்லை வரை நீந்தும் போது காற்றின் வேகம் மற்றும் கடல் நீரோட்டத்தின் வேகம் இல்லாததால் வேகமாக நீந்த முடிந்தது. ஆனால் இந்திய கடல் எல்லைப் பகுதியை கடந்த பின்னர் காற்று மற்றும் கடல் நீரோட்டம் வேகமாக இருந்ததால், தனுஷ்கோடி கடல் பகுதியை நீந்தி வர மிகுந்த சிரமமாக இருந்தது. குறிப்பாக இந்த கடல் பகுதியில் ஜெல்லி மீன்களின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நீந்துவது அதிக சிரமமாக இருந்தது. இந்த சாதனை படைக்க உதவிய எங்கள் பயிற்சியாளர் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்ததாக இங்கிலீஷ் கால்வாயில் நீந்தி சாதனை படைப்பதே எங்களது லட்சியம் ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவர்களின் சாதனை முயற்சிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
Related Tags :
Next Story