56 அரசு நடுநிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்


56 அரசு நடுநிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்
x
தினத்தந்தி 24 April 2022 1:30 AM IST (Updated: 24 April 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

56 அரசு நடுநிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்:
தமிழக அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 56 அரசு நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுவிற்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு அரசு பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழுக்களில் 20 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 15 பேர் பெற்றோர்கள், அதிலும் 10 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 5 பேரில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள், சுய உதவிக்குழுவினர் ஆகியோர் அடங்குவர். குழுவின் தலைவராக அப்பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் பெற்றோர் தேர்வு செய்யப்பட்டனர். அதிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. துணைத் தலைவராக அப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தையின் பெற்றோர், மாணவர்களின் பெற்றோராக உள்ள தூய்மைப் பணியாளர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் திருநங்கைகள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவர் ஒருவரின் பெற்றோர் ஆகியோரில் ஒருவர் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டனர். செயலராளராக பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டார். வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டு பேசுகையில், பள்ளி மேலாண்மை குழுவில் உள்ளவர்கள், பள்ளியின் சூழல் மேம்படுவதற்கு எவ்வாறு உதவ முடியும், மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதா?, தரமான, சுவையான மதிய உணவு வழங்கப்படுகிறதா?, பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா?, பாட புத்தகம் தாண்டி, மாணவ-மாணவிகளின் இதர திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். பள்ளி அமைந்திருக்கும் ஊர் மக்களின் பங்களிப்போடு பள்ளியின் தேவைகளை நிறைவேற்றி குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை இக்குழுவின் உறுப்பினர்கள் உறுதி செய்வார்கள், என்றார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிழவன், பெரம்பலூர் கல்வி மாவட்ட அலுவலர் சண்முகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story