வேலையை தேடி கண்டறிந்து இளைஞர்கள் பணியாற்ற வேண்டும்


வேலையை தேடி கண்டறிந்து இளைஞர்கள் பணியாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 24 April 2022 1:39 AM IST (Updated: 24 April 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

வேலையை தேடி கண்டறிந்து இளைஞர்கள் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் பேசினார்.

அரியலூர்:
அரியலூர் அரசு கலை கல்லூரியின் 54-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மலர்விழி தலைமை தாங்கினார். சின்னப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-
பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்து மேற்படிப்பும் பயில வேண்டும். கல்வி கற்ற ஒவ்வொருவரும் தங்களது படிப்பிற்கேற்ப வேலைகளை தேட வேண்டும். படித்த அனைவருக்கும் அரசு வேலை என்பது இயலாத காரியம். அரசு வேலையை விட தனியார் துறைகளில் அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு உள்ளது. எனவே, படித்த இளைஞர்கள் தனியார் துறைகளிலும் வேலை தேட வேண்டும். எல்லா படிப்புகளுக்கும் ஏற்ற வேலை உள்ளது. அதனை தேடி கண்டறிந்து பணியாற்ற வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் வர உள்ளது. இதனை நம் பகுதியில் உள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கல்லூரி முதல்வரின் கோரிக்கையை ஏற்று நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கலையரங்கம் அமைக்க முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் இளநிலை பிரிவில் 522 மாணவ-மாணவிகளுக்கும், முதுநிலைப் பிரிவில் 319 மாணவ-மாணவிகளுக்கும், ஆய்வியல் நிறைஞர் பிரிவில் 13 மாணவ-மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story