தமிழகத்தில் மின்வெட்டுக்கு மத்திய அரசுதான் காரணம்;விஜய்வசந்த் எம்.பி. குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று விஜய் வசந்த் எம்.பி. குற்றம் சாட்டினார்.
தென்தாமரைகுளம்,
தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று விஜய் வசந்த் எம்.பி. குற்றம் சாட்டினார்.
மக்கள் குறைகேட்பு முகாம்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நேரடியாக சென்று பொதுமக்களிடம் குறை கேட்கும் முகாமை தொடங்கினார். அதன்படி முதல் கட்டமாக அகஸ்தீஸ்வரத்தில் உள்ள முன்னாள் எம்.பி.யும், தனது தந்தையுமான வசந்தகுமார் நினைவு மணி மண்டபத்தில் வைத்து நேற்று காலையில் மக்கள் குறை கேட்பு முகாம் தொடங்கினார்.
இந்த முகாமில் கல்லூரி, அரசு பள்ளி, அரசு ஆஸ்பத்திரி ஆகியவைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டவும் மற்றும் பல்வேறு உபகரணங்கள் வழங்க வேண்டியும் அந்தந்த நிர்வாகம் சார்பில் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மேலும், ஏராளமான பொதுமக்களும் தங்களுடைய கோரிக்கைகளை விண்ணப்பங்களாக விஜய் வசந்த் எம்.பி.யிடம் வழங்கினார்கள். இந்த முகாம் காலை முதல் நண்பகல் வரை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
மின்வெட்டு
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் குறைகேட்கும் முகாம் நடத்தப்படும். தற்போது, தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார்கள் கூறுகின்றனர். இந்த மின்வெட்டுக்கு மத்திய அரசுதான் காரணம். தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனல் மின்நிலையங்களுக்கு போதிய அளவிற்கு நிலக்கரி வழங்கப்படவில்லை.
இதனால், போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாதநிலை இருந்து வருகிறது. இருப்பினும் தமிழக அரசு மின் உற்பத்தி நிலையங்களை தங்களுடைய கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இரட்டை ரயில் பாதை
மேலும், கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிக்கு மணல் கிடைப்பதில் பிரச்சினை இருப்பதால் அந்த பணியில் சற்று தாமதம் ஆகியுள்ளது. அதனை துரிதப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.
அதேபோல் கன்னியாகுமரி வரையிலான இரட்டை ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த பணியையும் தற்போது விரைவில் தொடங்குவதற்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஹெலிகாப்டர் தளம்
குமரி மாவட்டத்தில் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அடிக்கடி மாயமாகி வருகின்றனர். இவர்களை தேடுவதற்காக குமரி மாவட்டத்தில் ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்று மீனவ மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மீனவ மக்களின் நலன் கருதி மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த திட்டமும் விரைவில் நிறைவேறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி. உதயம், மாநில செயலாளர் வக்கீல் சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவர் முருகேசன், அகஸ்தீஸ்வரம் நகர தலைவர் கிங்ஸ்லி, காங்கிரஸ் நிர்வாகி குணசேகரன் உள்பட காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story