நெல்லை அருகே கோவில் விழாவில் பயங்கரம்: பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து


நெல்லை அருகே கோவில் விழாவில் பயங்கரம்: பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து
x
தினத்தந்தி 24 April 2022 2:37 AM IST (Updated: 24 April 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கோவில் விழாவில் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது

பேட்டை:
நெல்லை அருகே கோவில் விழாவில் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. அபராதம் விதித்ததால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பெண் சப்-இன்ஸ்பெக்டர்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகள் மார்க்ரெட் தெரசா (வயது 29). இவர் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். 
நேற்று முன்தினம் நெல்லையை அடுத்த பழவூரில் உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா நடந்து கொண்டிருந்தது. அங்கு சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சரமாரி கத்திக்குத்து 
நள்ளிரவு 1 மணியளவில் அங்கு பழவூர் பால் பண்ணை தெருவை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் வந்தார். அவர் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசாவை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவரது கழுத்து, கன்னம், தோள்பட்டை ஆகிய இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். 
பின்னர் ஆறுமுகம் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.அவரை மற்ற போலீசார் மடக்கிப் பிடித்தனர். கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த மார்க்ரெட் தெரசாவை சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொழிலாளி கைது
இதற்கிடையே, சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய ஆறுமுகத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுபோதையில் ேமாட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஆறுமுகம் மீது சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசாவை கத்தியால் குத்தியது தெரியவந்து உள்ளது.
இந்த பயங்கர சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்தார். பின்னர் அவரை சிகிச்சைக் காக மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.
முதல்-அமைச்சர் ஆறுதல்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மார்க்ரெட் தெரசாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
மேலும், நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்து, சம்பவம் குறித்து விவரம் கேட்டறிந்தனர். பா.ஜனதா மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வும் நேரில் சென்று நலம் விசாரித்தார். 
பரபரப்பு 
நள்ளிரவில் கோவில் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story