பாளையங்கோட்டை மண்டல தலைவராக பிரான்சிஸ் பதவி ஏற்பு
பாளையங்கோட்டை மண்டல தலைவராக பிரான்சிஸ் பதவி ஏற்றார்
நெல்லை:
பாளையங்கோட்டை மண்டல தலைவராக பிரான்சிஸ் பதவி ஏற்றார். வார்டு குழு கூட்டமும் நடந்தது.
பதவியேற்பு
நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல தலைவராக தி.மு.க. கவுன்சிலர் பிரான்சிஸ் தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் நேற்று காலை மண்டல தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அப்போது தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மண்டல தலைவர் அலுவலகத்தை திறந்து வைத்து, தலைவர் பிரான்சிஸ்க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் தச்சநல்லூர் ரேவதி பிரபு, நெல்லை மகேசுவரி, தரணி பில்டர்ஸ் முத்துகிருஷ்ணன், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
மண்டல கூட்டம்
தொடர்ந்து பிரான்சிஸ் தலைமையில், பாளையங்கோட்டை மண்டல வார்டு குழு கூட்டம் நடைபெற்றது. உதவி ஆணையாளர் ஜகாங்கீர், உதவி செயற்பொறியாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் அனுராதா சங்கரபாண்டியன், சீதா பாலன், பாலம்மாள் முத்து, சுப்புலட்சுமி, சின்னத்தாய், பேச்சியம்மாள், ஷர்மிளா, லட்சுமி, மேரி, இந்திரா, பவுல்ராஜ், ஜெகநாதன், முத்து சுப்பிரமணியன் ஆகியோர் தங்களது வார்டு குறைகளை சுட்டிக்காட்டி பேசினார்கள். அப்போது குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். பாளையங்கால்வாய்க்கு செல்லும் வடிகாலை சீரமைக்க வேண்டும். பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் காமராஜர் திறந்த கல்வெட்டை மீண்டும் அமைத்து, அந்த பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
கழிவறை புதுப்பிக்கும் பணி
நெல்லை வண்ணார்பேட்டை கம்பராமாயண தெரு, திருக்குறிப்புத்தொண்டர் தெரு, முல்லை நகர், பழனி தெரு, மாதா நடுத்தெரு, பொட்டல் ஆகிய 6 பகுதிகளில் உள்ள கழிப்பறைகள் ரூ.26.15 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி தொடங்கியது.
இதற்கான தொடக்க விழாவுக்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் பி.எம்.சரவணன், கழிப்பறைகளை புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைத்தார். மண்டல தலைவர் ரேவதி பிரபு, கவுன்சிலர் கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுகாதார வளாகம்
நெல்லை மாநகராட்சியில் 29 பொது கழிப்பிடங்கள், 169 சமுதாய கழிப்பிடங்கள் உள்ளன. நெல்லையப்பர் கோவில் அருகில், கண்டியப்பேரி உழவர்சந்தை வளாகம், ஐகிரவுண்டு அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரி வளாகம், ராஜேந்திரநகர் ஆகிய 4 இடங்களில் நவீன வசதிகளுடன் பொது சுகாதார வளாகம் ரூ.2.40 கோடியில் அமைக்கப்படுகிறது. அங்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற பொது சுகாதார வளாகங்கள் அமைக்கப்படும்.
மேலும் தூய்மை பணியாளர்கள் நலன் கருதி 9 இடங்களில் ரூ.27 லட்சத்தில் கழிப்பிடங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அம்ருத் திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் மொத்தம் ரூ.2.16 கோடியில் பொது கழிப்பிடங்கள் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியால் புதிதாக விரைவு தகவல் குறியீடு அமைக்கப்பட்டு உள்ளதால், இந்த கழிப்பிடங்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story