சேலம் லீ பஜாரில் சுற்றுச்சுவர் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
சேலம் லீ பஜாரில் சுற்றுச்சுவர் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சேலம்,
சேலம் அரிசிபாளையம் பகுதியில் லீ பஜார் என்ற பெயரில் வர்த்தக சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த லீ பஜார் வர்த்தக மையம் சுமார் 12 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதன் அருகே உள்ள பாவேந்தர் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனிடையே லீ பஜாரில் 2 ஏக்கர் நிலம் ஹவுசிங் போர்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே வர்த்தக சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டின் அனுமதியை பெற்று நேற்று காலியாக உள்ள இடத்தில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு பொதுமக்கள் திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் பொதுமக்களிடம் கோர்ட்டின் அனுமதியை பெற்று சுற்றுச்சுவர் கட்டுவதாகவும், உங்களது கோரிக்கையை உயர் அதிகாரிகளை சந்தித்து தெரிவிக்குமாறும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
Related Tags :
Next Story