சேலத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடி உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சேலத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடி உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
பணம் பறிப்பு
சேலம் கிச்சிப்பாளையம் கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் என்கிற சுருட்டையன் (வயது 31). இவர் கடந்த 2-ந் தேதி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கிச்சிப்பாளையம் கருவாட்டு பாலம் அருகே லைன்மேட்டை சேர்ந்த தாதாஹயாத் என்பவரை வழிமறித்தார். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி தாதாஹயாத்திடம் இருந்த ரூ.750-யை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடியான சுருட்டையனை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் மீது ஏற்கனவே கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
சேலம் மிட்டாபுதூரை சேர்ந்தவர் குமரன் (31). இவருக்கு, பெரியபுதூரை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவரான வெங்கடேசனை, கள்ளக்காதலியுடன் சேர்ந்து குமரன் கொலை செய்தார். இதுதொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் சுருட்டையன், குமரன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன் (கிச்சிப்பாளையம்), காந்திமதி (அழகாபுரம்) ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.
இதை பரிசீலித்து சுருட்டையன், குமரன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். இதில் சுருட்டையன் ஏற்கனவே கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story