ஆற்றில் மெகா தூய்மை பணி
தாமிரபரணி ஆற்றில் மெகா தூய்மை பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் முதல் மருதூர் அணை வரை தாமிரபரணி ஆற்றில் மெகா தூய்மை பணியை கலெக்டர் விஷ்ணு நேற்று தொடங்கி வைத்தார்.
மெகா தூய்மை பணி
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில், ‘தூய பொருநை நெல்லைக்கு பெருமை’ என்ற தலைப்பில் தாமிரபரணி நதிக்கரையில் மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சின்ன மயிலாறு பகுதியில் இருந்்து மாவட்ட எல்லையான மருதூர் அணை வரை தாமிரபரணி ஆற்றில் மெகா தூய்மை பணி நேற்று நடந்தது. இதன் தொடக்க விழா சின்னமயிலாறு பகுதியில் நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தூய்மை பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பாபநாசம் கோவில் படித்துறை, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் படகில் பயணம்
பாபநாசம் கோவில் முன்பு கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் தாமிரபரணி குறித்து குறும்படம் வெளியிடப்பட்டு, அங்கிருந்த பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலெக்டர் விஷ்ணு பாபநாசம் கொட்டாரம் பகுதியில் இருந்து புலவன்பட்டி படித்துறை வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் தாமிரபரணி ஆற்றில் படகில் சென்றார்.
ஆக்கிரமிப்புகள்
முன்னதாக கலெக்டர் விஷ்ணு கூறுகையில், ‘தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை நீர்நிலைகளில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த 16 ஹெக்டேர் விவசாய நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள பழங்கால மண்டபங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் சுமார் 62 கிலோ மீட்டர் தூரம் டிரோன் மூலம் சர்வே எடுக்கப்பட்டு உள்ளது, அங்கு தூய்மை பணிகள் தன்னார்வலர்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
நிகழ்ச்சிகளில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிந்து, மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட வனத்துறை கள இயக்குனர் செந்தில்குமார், அம்பை தாசில்தார் ஆனந்த் பிரகாஷ், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் கண்மணி, தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், மதுரா கோட்ஸ் ஐ.ஆர்.எம். சூரியபிரபா, ஜி.எம். சீனு ரெங்கநாதன், மணிமுத்தாறு பேரூராட்சி தலைவர் அந்தோணியம்மாள், அம்பை யூனியன் தலைவர் பரணிசேகர், சிவந்திபுரம் ஊராட்சி தலைவர் ஜெகன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசெல்வி, ஆணையாளர் ராஜம் உள்ளிட்டோர் கலந்து ெகாண்டனர்.
நெல்லை
நெல்லை வண்ணார்பேட்டையில் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணியை நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, கவுன்சிலர் கந்தன், உதவி ஆணையாளர் லெனின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
57 இடங்களில் தூய்மை பணி
பாபநாசம் அணை முதல் மருதூர் அணைக்கட்டு வரை தாமிரபரணி ஆற்றில் 57 இடங்களில் தூய்மை பணி நடந்தது. இந்த பணியில் மொத்தம் 4,700 மாணவ-மாணவிகள், 500 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் மூலம் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்தும் வகையில், மஞ்சப்பை வழங்கப்பட்டது.
பல்வேறு இடங்களில் நடைபெற்ற தூய்மை பணிகளை கலெக்டர் விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டு, ஊக்கப்படுத்தினார்.
மேலப்பாளையம்
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன் தலைமையில், மெகா கூட்டு தூய்மை பணி, மேலப்பாளையம் மண்டலம் 45-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.
110 பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள ஓடைகளை தூர்வாரி சுத்தம் செய்தனர். முட்செடிகளையும் அகற்றினர்.
Related Tags :
Next Story