ரேஷன் கடை வாசலில் பதுக்கி வைத்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ரேஷன் கடை வாசலில் பதுக்கி வைத்த 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய வழுதிலம்பேடு கிராமத்தில் உள்ள ரேஷன் கடை வாசலில் பட்டபகலில் அரிசி மூட்டைகள் கடத்தலுக்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். இதில் ரேஷன் கடை வாசலில் 36 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 டன் எடை கொண்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் மாவட்ட உணவு பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல நத்தம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை வாசலில் இருந்து சீல் பிரிக்கப்படாத 36 மூட்டை ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story