கோத்தகிரியில் கேரள பாரம்பரிய ரதத்தில் மாரியம்மன் வீதி உலா


கோத்தகிரியில் கேரள பாரம்பரிய ரதத்தில் மாரியம்மன் வீதி உலா
x
தினத்தந்தி 24 April 2022 7:08 PM IST (Updated: 24 April 2022 7:08 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று கேரள பாரம்பரிய ரதங்களின் ஊர்வலம் நடைபெற்றது.

கோத்தகிரி

கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று கேரள பாரம்பரிய ரதங்களின் ஊர்வலம் நடைபெற்றது.

மாரியம்மன் கோவில் திருவிழா

கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் தினமும் பல்வேறு சமுதாய மக்களின் உபயத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பல்வேறு வாகனங்களில் வீற்றிருந்து திருவீதி உலா வரும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோத்தகிரி மறுநாடன் மலையாளிகள் சங்கத்தின் சார்பில் கேரள ரத ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு கோத்தகிரி டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கேரள பஞ்ச வாத்தியம், தாலப்பொலி, சிங்காரி மேளம், செண்டை மேளம், கண்ணைக் கவரும் காவடி நடனம், பல்வேறு கடவுள்களின் வேடமணிந்த கலைஞர்களின் நடனத்துடன், இசைக்கருவிகள் முழங்க அலங்கார ரதங்கள் ஊர்வலம் புறப்பட்டது. 

கேரள ரதத்தில் அம்மன் வீதி உலா

ஊர்வலத்துக்கு முன்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்து தாலம் ஏந்தியவாறு சென்றனர். இந்த ஊர்வலமானது காமராஜர் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம், மார்க்கெட் திடல், பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடைவீதி மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது.  தொடர்ந்து பகல் 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் மதியம் ஒரு மணிக்கு கோத்தகிரி அய்யப்பன் கோவில் வளாகத்தில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நகரமே விழாக்கோலம் பூண்டது

இதையடுத்து மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கேரள ரதத்தில அம்மன் எழுந்தருளி பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தார். இதில் பிரமாண்டமான உருவத்தில் அமைக்கப்பட்டிருந்த அனுமன் அவதாரமாக உருவெடுக்கும் தத்ரூபமான காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அம்மன் திருவீதி உலா சதுக்கம் வந்தடைந்தவுடன் இரவு 9 மணிக்கு கோத்தகிரி காந்தி மைதானத்தில் கண்ணைக் கவரும் வானவேடிக்கை நடத்தப்பட்டது. கேரளா ரத விழாவையொட்டி, ஏராளமான பொதுமக்கள் கோத்தகிரியில் திரண்டதால் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. 
இந்த விழாவையொட்டி கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story