நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும்
வருங்கால சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
வெளிப்பாளையம்:
வருங்கால சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
கிராம சபை கூட்டம்
கீழ்வேளூர் ஒன்றியம் வடக்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, நேற்று நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஊராட்சிகளில் நீடித்த இலக்குகள் குறித்த உறுதி மொழியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையிலும், நாகை மாலி எம்.எல்.ஏ. முன்னிலையிலும் அனைவரும் எடுத்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும்
வடக்கு பொய்கைநல்லூர் ஊராட்சியை நீர் நிறைந்த கிராமமாக உருவாக்க வேண்டும். அதற்கு ஊரில் உள்ள குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். பண்ணை குட்டைகள் அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும். நமக்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினருக்கும் பயன்பெறும் வகையில் நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும்.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கிராம அளவில் கிராம குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருக்கிறார்களா? என கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் இக்குழு மூலமாக சரி செய்ய வேண்டும்.
ஒத்துழைப்பு
பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். அனைவரும் சுத்தமான பசுமையான கிராமமாக மாற்ற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ரேவதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story