ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் பறிமுதல்


ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 April 2022 9:30 PM IST (Updated: 24 April 2022 9:30 PM IST)
t-max-icont-min-icon

ஜமுனாமரத்தூரில் சமுதாய கூடத்தில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை

ஜமுனாமரத்தூரில் சமுதாய கூடத்தில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

 விற்பனையாளர் பணியிடை நீக்கம் 

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அருணகிரி. இவர், அங்குள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் மாணவர் விடுதியில் காப்பாளராக பணியாற்றி வருகிறார். 

இவரது மனைவி சாந்தி, தோப்பூர் மற்றும் கல்யாணமந்தை கிராமங்களில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி நள்ளிரவு அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வெளி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல சரக்கு வேனில் ஏற்றி கொண்டிருந்த போது உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து பறிமுதல் செய்தனர். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அருணகிரி மற்றும் சாந்தி ஆகியோர் தலைமறைவாகினர். மேலும் சாந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

 ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் பறிமுதல்

தொடர்ந்து அந்த குழுவினர் ஜமுனாமரத்தூரில் முகாமிட்டு சோதனை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தி பணியாற்றிய கல்யாணமந்தை பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் சோதனை நடத்தினர். அங்கு அவர் பதுக்கி வைத்திருந்த 60 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து கிடைத்த தகவலின் பேரில் மீண்டும் அந்த சமுதாய கூடத்தில் உள்ள அறையை திறந்து சோதனை நடத்தினர். அதில் 51 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் 14 கோதுமை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையும் பறிமுதல் செய்த அலுவலர்கள் மற்றும் போலீசார் இதற்கும், தலைமறைவான விற்பனையாளர் சாந்தி என்பவருக்கு தொடர்பு உள்ளதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து ஜமுனாமரத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது பறிமுதல் செய்யப்பட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story