ரூ.8.70 கோடியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி
ரூ.8.70 கோடியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது
பொறையாறு
மயிலாடுதுறை மாவட்டத்தில், முதல்-அமைச்சரின் சிறப்பு தூர்வாரும் பணி 2022-ன் கீழ் காவிரி ஆறு, மகிமலையாறு, மஞ்சளாறு, வீரசோழனாறு, நண்டலாறு, மண்ணியாறு, புது மண்ணியாறு, அய்யாவையனாறு, விக்ரமனாறு, பாலாறு மற்றும் தெற்குராஜன் ஆறுகளில் பிரியும் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் ரூ.8 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
இதனையொட்டி பொறையாறு அருகே திருக்களாச்சேரி ஊராட்சி, பாலூர் கிராமத்தில் புத்தாகரம் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் லலிதா, நிவேதா முருகன் எம்.எல்.ஏ.ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.8 கோடியே 70 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 49 நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
49 குழுக்கள்
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த மாதத்திலேயே தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. தூர்வாரும் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள்-விவசாயிகள் அடங்கிய 49 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விடுபட்ட தூர்வாரும் பணிகளை விவசாயிகளின் கருத்தை கேட்டு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக ரூ.2 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்த பின் அந்த பணிகளும் விரைவில் நிறைவேற்றி தரப்படும்.
மேட்டூர் அணையிலிருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், காவிரி கடைமடை பகுதிக்கு 20-ந் தேதி தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் தூர்வாரும் பணிகள் 70 எந்திரங்கள் கொண்டு விரைவாக முடிக்கப்படும்.
விளைநிலங்கள் பயன்பெறும்
பாலூர் கிராமத்தில் புத்தாகரம் வடிவாய்க்கால் 8.கி.மீ.தூரம் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலுப்பூர், புத்தாகரம், மாங்குடி, அரசலங்குடி, எடுத்துக்கட்டி, பாலூர், ஆயப்பாடி, தேவனூர், திருக்களாச்சேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த 1,530 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், மயிலாடுதுறை கிழக்கு காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் பாண்டியன் மற்றும் உதவி பொறியாளர்கள், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story