கஞ்சா வியாபாரிகள் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது வங்கி கணக்குகள் முடக்கம்
கஞ்சா வியாபாரிகள் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களது வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி மற்றும் ஓடைப்பட்டி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 85 கிலோ கஞ்சாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா வியாபாரிகளான காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த பூபாலன் (வயது 29), முரளிதரன் (41), விஜயன் (42), அருண் பாண்டி (26), கணேசன் (26), ஓடைப்பட்டியை சேர்ந்த சரத் (22) ஆகிய 6 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட 6 பேரின் வங்கி கணக்கு, மற்றும் நெருக்கமான உறவினர்களின் வங்கி கணக்கு, சொத்து விவரங்கள், சொந்தமான வாகனங்கள் குறித்து உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் விவரங்களை சேகரித்து வந்தனர்.
இந்த நிலையில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே பரிந்துரையின் பேரில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், கஞ்சா வியாபாரிகள் 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான உத்தரவு நகலை உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுரை மத்திய சிறைச்சாலை சூப்பிரண்டிடம் வழங்கினார். இதனிடையே 6 பேரின் வங்கி கணக்குகள் மற்றும் இவர்களுக்கு நெருக்கமான உறவினர்கள் என மொத்தம் 9 பேரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கி உள்ளனர். இதேபோல் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story