ரூ.5 லட்சம் போதை பொருட்கள் காருடன் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அணைக்கட்டு
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அண்ணன்- தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதை பொருட்கள் கடத்தல்
தமிழகம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில், பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு வேன் மற்றும் காரை நிறுத்தி சோதனையிட்டனர். இந்த சோதனையில் வேன் மற்றும் காரில் 50 மூட்டைகளில் குட்கா, ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட 462 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை வேன் மற்றும் காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைபொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
3 பேர் கைது
தொடர்ந்து நடத்திய விசாரணையில் வேன் டிரைவர் கிருஷ்ணகிரியை அடுத்த மிடிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 36) என்பதும், காரில் போதை பொருட்களை கடத்தி வந்தவர்கள் சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணன்- தம்பிகளான முத்துக்குமார், முத்துராஜ் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து பள்ளிகொணடா மற்றும் விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து போதைப்பொருள் கடத்திய மாரிமுத்து, முத்துராஜ் மற்றும் முத்துக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story