அன்னியூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்


அன்னியூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 April 2022 10:50 PM IST (Updated: 24 April 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

காணை, அன்னியூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் புகழேந்தி பேசினார்.

விக்கிரவாண்டி, 

தமிழக சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தி கலந்து கொண்டு பேசியதாவது:- 

அரசு கலைக்கல்லூரிகள்

விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியம் மாம்பழப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் விடுதியும், விக்கிரவாண்டி ஒன்றியம் பனையபுரத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் அமைத்து தர வேண்டும். விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் ஐ.டி. பார்க், செஞ்சி சாலை தும்பூர் அருகே சிப்காட் அமைக்க வேண்டும். 

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மாணவர்கள் அரசு கல்லூரியில் படிப்பதற்காக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள விழுப்புரத்திற்கு சென்று படிக்கும் சூழ்நிலை உள்ளது எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, காணை, அன்னியூர் ஆகிய பகுதிகளில் அரசு கலைக்கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும்

மேல் காரணை மற்றும் கஞ்சனூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளிகளாகவும், கொட்டியாம்பூண்டி ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. எனவே அதற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள பொன்னங்குப்பம் ஊராட்சி தனி ஊராட்சியாக 30 ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. வருவாய்த்துறையில் ஆசூர் தெற்கு என்று உள்ளதை பொன்னங்குப்பம் வருவாய் கிராமமாக மாற்றித்தர வேண்டும். 

மேம்பாலம்

காணை ஒன்றியத்தில் அத்தியூர் திருக்கை ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா காலத்தில் பணிபுரிந்து வந்த 62 செவிலியர்கள், 55 தொழில்நுட்ப பணியாளர்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும், மேலும் விக்கிரவாண்டி தாலுகாவில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைக்க வேண்டும். 
இவ்வாறு புகழேந்தி எம்.எல்.ஏ. பேசினார்.

Next Story