அவுரங்காபாத்- புனே இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் விரைவு சாலை- மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவிப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 24 April 2022 10:59 PM IST (Updated: 24 April 2022 10:59 PM IST)
t-max-icont-min-icon

அவுரங்காபாத்- புனே இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் விரைவு சாலை அமைக்கப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.

அவுரங்காபாத், 
அவுரங்காபாத்- புனே இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் விரைவு சாலை அமைக்கப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவித்துள்ளார். 
தேசிய நெடுஞ்சாலை
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதிக் கட்காரி இன்று அவுரங்காபாத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதில், ஒரு பகுதியாக ரூ.3 ஆயிரத்து 216 கோடி செலவில் அமைக்கப்பட்ட 86 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
மேலும் ரூ.2 ஆயிரத்து 253 கோடி மதிப்பிலான நான்கு சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 
முன்னதாக விழாவில் அவர் பேசியதாவது:-
புதிய விரைவுசாலை
அவுரங்காபாத் மற்றும் புனே இடையேயான தூரம் சுமார் 224 கிலோ மீட்டர் ஆகும். இந்த 2 நகரங்களுக்கும் இடையே பயண நேரத்தை குறைக்கும் வகையில் விரைவு சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த சாலையில் திருப்பங்கள் ஏதும் இருக்காது. வாகனம் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். 
இது இரு நகரங்களுக்கிடையேயான பயண நேரத்தை 1.15 மணி நேரமாக குறைக்க உதவும். தற்போது இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் 4 முதல் 5 மணி நேரமாக இருக்கிறது. 
இந்த புதிய கட்டமைப்பு பைதான் மற்றும் அகமதுநகர் வழியாக செல்லும். 
இதேபோல அவுரங்காபாத்தில் உள்ள ஜல்னா சாலையில் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண இரட்டை அடுக்கு பாலம் கட்டப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 
ஜெயக்வாடி அணை
மேலும் மரத்வாடாவில் நிலவும் தண்ணீர் பற்றக்குறை குறித்து பேசிய அவர், “மரத்வாடா மண்டலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க ஒரு திட்டத்தை வகுத்துள்ளேன். குஜராத் மற்றும் மராத்திய மாநிலங்களுக்கு இடையே நீர் பகிர்வு குறித்த பிரச்சினைக்கு தீர்வு கண்டால், அதன்மூலம் அவுரங்காபாத்தில் உள்ள ஜெயக்வாடி அணை மிகப்பெரிய பலனை பெறும். 
ஒவ்வொரு ஆண்டும் அணை நிரம்பும். தண்ணீர் பற்றாக்குறையும் முடிவுக்கு வரும்” என்றார். 

Next Story