கள்ளக்குறிச்சியில் பரபரப்பு கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினரை தாக்கிய பா.ம.க. பிரமுகர் கைது போலீஸ் நிலையம் முன்பு கட்சியினர் சாலை மறியல்


கள்ளக்குறிச்சியில் பரபரப்பு கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினரை தாக்கிய பா.ம.க. பிரமுகர் கைது போலீஸ் நிலையம் முன்பு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 April 2022 11:05 PM IST (Updated: 24 April 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் மீது தாக்கிய பா.ம.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரது கைதை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே உள்ளது மாதவச்சேரி ஊராட்சி. நேற்று இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அங்கு வந்த பா.ம.க.வின் பசுமை தாயக மாவட்ட செயலாளரான அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 40) என்பவர், தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக கருத்து தெரிவித்து பேசினார்.

அப்போது, அங்கிருந்த ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினரான பெரியசாமி மகன் சுரேஷ் என்வருக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் சிறிது  நேரம் பரபரப்பு நிலவியது. 

கைது

 இந்த சம்பவம் தொடர்பாக, சுரேஷ் கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதில் தன்னை ராமச்சந்திரன் தாக்கியதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தனர்.

 இதேபோன்று, ராமச்சந்திரனும் கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதில், சுரேஷ் தன்னை தாக்கியதாக கூறியிருந்தார். அதன்பேரிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாலை மறியல்

இதற்கிடையே, இந்த சம்பவம் பற்றி அறிந்த பா.ம.க.வினர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் முன்பு ஒன்று திரண்டு, சங்கராபுரம் சாலையில் மறியில் ஈடுபட்டனர். அப்போது, பா.ம.க பிரமுகர் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 


இதுபற்றி தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி மற்றும் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசாருடன் வாக்குவாதம்

அப்போது அவர்கள், ராமச்சந்திரன் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதுடன், போலீசார் இந்த பிரச்சினையில் ஒருதலை பட்சமான நடவடிக்கை  எடுத்துள்ளனர். ஏனெனில் ராமச்சந்திரன் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

Next Story