களர் நிலத்தையும் பொன் விளையும் பூமியாக்கும் பலதானிய விதைப்பு முறை
களர் நிலத்தையும் பொன் விளையும் பூமியாக்கும் பலதானிய விதைப்பு முறையை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வழிகாட்டியுள்ளனர்.
போடிப்பட்டி
களர் நிலத்தையும் பொன் விளையும் பூமியாக்கும் பலதானிய விதைப்பு முறையை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வழிகாட்டியுள்ளனர்.
ரசாயன உரங்கள்
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பலவித இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பெருந்தொற்று காலத்தில் ஆரோக்கியமான, சத்துள்ள உணவுப்பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது நல்ல மாற்றமாகும். இதனால் இயற்கை விளைபொருட்களை நோக்கி நுகர்வோரின் தேடல் நகரத்தொடங்கியுள்ளது.
இதனால் இயற்கை விவசாயத்தில் விவசாயிகளிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசாயன உரங்களின் பயன்பாட்டால் மலடாகிப் போன மண்வளத்தை மட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கும் களர்நிலங்களைக் கூட பலதானிய விதைப்பு முறையால் மீட்டெடுக்க முடியும் என்று திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து வழிகாட்டுகிறார்.
மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள்
இதுகுறித்து அவர் கூறியதாவது:- மண்ணைத் தாயாக வணங்கிய நமது முன்னோர் இயற்கை உரங்களான சாணம், கோமியம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் போன்றவற்றைப் பயன்படுத்தியே விவசாயம் செய்தனர். ஆனால் தற்போது ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் தாக்கம் மண்ணில் தங்கிவிடுகிறது. இதன் தாக்கத்திலிருந்து பாதுகாத்து மண்வளத்தை மேம்படுத்த பலதானிய விதைப்பு முறை கைகொடுக்கிறது.
இயற்கை விவசாயத்துக்கு மாற விரும்பும் விவசாயிகள் முதல்கட்டமாக பலதானிய விதைப்பை மேற்கொள்ளலாம். அதன்படி தானியவகை பயிர்களான சோளம் 1 கிலோ, கம்பு ½ கிலோ, தினை, சாமை ¼ கிலோ, பயறுவகை பயிர்களான உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, கொண்டைக்கடலை தலா 1 கிலோ, எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு தலா 2 கிலோ, எள் ½ கிலோ, பசுந்தாள் பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பை தலா 2 கிலோ, நரிப்பயிர் ½ கிலோ, கொள்ளு 1 கிலோ, நறுமணப்பயிர்களான கடுகு ½ கிலோ, வெந்தயம், சீரகம் ¼ கிலோ, கொத்தமல்லி 1 கிலோ ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட விதைகளை குறிப்பிட்ட அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவரவர் பகுதியில் கிடைக்கும் விதைகளை வகைக்கு 4 வீதம் எடுத்து பயன்படுத்தலாம். எடுத்துக்கொண்ட பலதானிய விதைகளை விதைத்து 45 முதல் 50 நாட்களில் பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழ வேண்டும். இவ்வாறு 3 முறை பலதானிய விதைப்பு செய்வதன் மூலம் மண்வளத்தை மீட்டெடுக்க முடியும். இதன் மூலம் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் ஊட்டச்சத்து சமச்சீராக கிடைக்கச் செய்கிறது. எனவே விவசாயிகள் பலதானிய விதைப்பு மேற்கொண்டு களர் நிலத்தையும் பொன் விளையும் பூமியாக மாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story