சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு
காங்கயம் அருகே படியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார்.
காங்கயம்
காங்கயம் அருகே படியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார்.
சிறப்பு கிராமசபை கூட்டம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்திட உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில் காங்கயம் ஊராட்சி ஒன்றியம், படியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ஊராட்சிகளில் 9 இலக்குகளை அடைந்து நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைந்த ஊராட்சியாக மாற்றுதல், வறுமை இல்லா ஊராட்சி, அனைத்து வயதினரும் உடல் நலத்துடனும் வாழ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, அனைத்து வீடுகளுக்கும் தரமான குடிநீர் வழங்குதல், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்ட கிராம ஊராட்சி அமைத்தல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்து விவாதித்தல், மாற்றுத் திறனாளிகள் நலம், வரி செலுத்தும் இணையதளம் குறித்தும், ஊரகப் பகுதிகளில் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக வழிமுறைகளை எளிமைப்படுத்துதல் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வரப்பெறும் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்வு காணுவதற்கு மாவட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள குறைதீர்ப்பாளர் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள செய்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை
மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 265 கிராம ஊராட்சிகளிலும் மேற்படி கூட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கிராம சபை கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
பின்னர் தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை பயனாளிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் எஸ்.ஞானசேகரன், காங்கயம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பி.பி.அப்புக்குட்டி, படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம், காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story