வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் நுங்கு விற்பனை படுஜோர்
நொய்யல் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் நுங்கு விற்பனை படுஜோராக நடக்கிறது.
நொய்யல்,
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனத்திலும், நடந்தும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதன் காரணமாக பொதுமக்கள் தாகத்தைத் தணித்துக்கொள்ள நுங்கு, வெள்ளரி மற்றும் தர்பூசணிகள் உள்ளிட்ட பல்வேறு குளிர்ச்சியூட்டும் பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் நுங்கு எங்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை கண்டறிந்து தேடிப்பிடித்து பொதுமக்கள் வாங்கிச் செல்வதை காணமுடிகிறது.
உடல் வெப்பம் தணித்து...
இவ்வாறு விற்பனை செய்யப்படும் நுங்கு சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணிப்பதற்கு மட்டுமில்லாமல் நுங்கில் வைட்டமின் பி மற்றும் இரும்பு சத்துக்கள், ஜிங்க், பொட்டாசியம் சத்துக்கள் அடங்கி உள்ளதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் உடல் வெப்பத்தை தணித்து வெயில் காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய வகையில் உள்ளன.
அத்துடன் உடலில் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக உள்ளதால் பொதுமக்கள் பலர் குளிர்பானங்களை வாங்குவதைக் காட்டிலும் இயற்கையில் விளைவிக்கப்படும் நுங்கை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். நுங்கு சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நுங்கு விற்பனை படுஜோர்
இதன் ஒரு பகுதியாக நொய்யல் புன்னம் சத்திரம், பாலத்துறை, புகழூர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரம் நுங்கு விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் வெயிலில் ஏற்படும் தாகத்தை தணித்துக்கொள்ள தர்பூசணி, வெள்ளரி, நுங்கு உள்ளிட்டவற்றை அதிகம் நாடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடலில் வேர்க்குரு ஏற்பட்டால் நுங்கை உடம்பில் பூசிக் கொள்வார்கள். அதே போல அடிக்கடி நுங்கு பூசிக் கொள்ளும் போது உடலில் உள்ள வேர்க்குரு முற்றிலும் சரியாகிவிடும்.
Related Tags :
Next Story