கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானைக்கு ரூ.8 லட்சத்தில் நீச்சல் குளம்
சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானைக்கு ரூ.8 லட்சத்தில் நீச்சல் குளம் கட்ட கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
கும்பகோணம்:-
சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானைக்கு ரூ.8 லட்சத்தில் நீச்சல் குளம் கட்ட கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
யானை மங்களம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான யானைக்கு மங்களம் என்று பெயர். 55 வயதான மங்களம் கடந்த 40 ஆண்டுகளாக கோவிலில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு பாகனாகவும், பயிற்றுனராகவும் அசோக் என்பவர் பணியில் உள்ளார்.
மங்களம் பகல் நேரங்களில் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுடன் கோவில் சாமி புறப்பாட்டின் போது உற்சவருடன் வீதிகளில் வலம் வருவது வழக்கம். மேலும் மங்களம் புத்துணர்வோடு இருக்க கோவில் உள் பிரகாரத்தில் நடை பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் மங்களம் ஆரோக்கியத்துடன் வாழ தேவையான உணவுகள் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது.
நீச்சல் குளம்
இவ்வாறு பல்வேறு வசதிகள் செய்த நிலையில் யானை குளிப்பதற்கு என்று தனியான இட வசதிகள் கிடையாது. கோவிலுக்கு உள்ளே உள்ள மோட்டார் பம்புசெட் உதவியுடன் யானையை குளிப்பாட்டுவது வழக்கம். தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால், மங்களம் மோட்டார் பம்பு செட்டு உதவியுடன் குளித்தாலும், நீரில் மூழ்கி குளிக்கிற வசதி இல்லை. இதனால் யானையின் வெப்பத்தை குறைக்க முடியாமல் கோவில் நிர்வாகத்தினர் தவித்து வந்தனர்.
இந்தநிலையில் கோவையை சேர்ந்த ஒரு பக்தர் தனது சொந்த செலவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் யானை குளிப்பதற்கு 5 அடி ஆழம், 29 அடி அகலத்தில் குளம் கட்டித்தர முன்வந்தார். இதையடுத்து அவரது உதவியை ஏற்றுக்கொண்ட கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் மற்றும் அலுவலர்கள் உடனடியாக யானை மங்களம் உருண்டு படுத்து பலமணி நேரம் குளிக்கும் வகையில் நீச்சல் குளத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
பயன்பாட்டுக்கு விடப்படும்
அதன்படி கோவிலின் வடகிழக்கு பகுதியில் 10 அடி ஆழத்தில் குழி அமைத்து அதில் 4½ அடி உயரத்தில் மண், சிமெண்டு ஆகியவை நிரப்பப்பட்ட தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடித்தளம் ஸ்திர தன்மையுடன் இருக்க கால அவகாசம் தேவை என்பதால் தற்போது சிறிது கால இடைவெளி விடப்பட்டு உள்ளது.
இங்கு தொடர்ந்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டு யானை குளிப்பதற்கான பயன்பாட்டுக்கு விடப்படும். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:-
யானை மங்களத்துக்கு தேவையான வசதிகள் அனைத்தும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்து வந்துள்ளோம். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் யானைக்கு போதுமான இயற்கையான குளிர்ச்சி தன்மை தற்போதைய குளிப்பாட்டும் முறையில் கிடைக்கவில்லை. எனவே யானை குளிப்பதற்கு குளம் அமைக்க முடிவு செய்தோம்.
இயற்கையாக...
பக்தர்களின் உதவியோடும் அறநிலையத்துறையின் ஒத்துழைப்போடும் இந்த குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யானை மங்களத்துக்கு இயற்கையாக குளிக்கும் போது கிடைக்கும் அத்தனை பலன்களும் கிடைக்கும். இந்த குளம் ஒரு சில வாரங்களில் யானையின் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story