சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மராட்டியத்தில் கைதான காங். பிரமுகரின் சகோதரருக்கு போலீஸ் காவல்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மராட்டியத்தில் கைதான காங்கிரஸ் பிரமுகரின் சகோதரர் 13 நாட்கள் சி.ஐ.டி. போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர், பிற அரசு தேர்வுகளிலும் முறைகேட்டில் ஈடுபட்டாரா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூரு:
மராட்டியத்தில் கைது
கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்திருப்பது குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளின் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக போலீஸ்காரர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் கலபுரகி மாவட்டம் அப்சல்புரா பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ் பட்டீலும் ஒருவர் ஆவார்.
இவரும், சகோதரர் ருத்ரேகவுடா பட்டீலும் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுமுறைகேட்டில் ஈடுபட்டு இருந்தது சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ருத்ரேகவுடாவை நேற்று முன்தினம் மராட்டிய மாநிலத்தில் வைத்து சி.ஐ.டி. போலீசார் கைது செய்திருந்தார்கள். பின்னர் நேற்று காலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து கலபுரகிக்கு ருத்ரேகவுடாவை போலீசார் அழைத்து வந்தனர்.
13 நாட்கள் போலீஸ் காவல்
அதன்பின், நீதிபதி வீட்டில் ருத்ரேகவுடா ஆஜர்படுத்தப்பட்டார். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டிய இருப்பதால், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி நீதிபதியிடம் போலீசார் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, ருத்ரேகவுடாவை 13 நாட்கள் சி.ஐ.டி. போலீசார் வசம் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து, ருத்ரேகவுடாவிடம் கலபுரகியில் வைத்து தீவிர விசாணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சப்-இன்ஸ்பெக்டர் முறைகேடு தவிர பிற அரசு பணிகளுக்கு நடந்த தேர்வுகளிலும் மகாந்தேஷ் மற்றும் ருத்ரேகவுடா ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது போலீஸ் ஏட்டு உள்ளிட்ட அரசு பணிகளுக்கான தேர்வில் பல லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு, ருத்ரேகவுடா முறைகேடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுகுறித்து ருத்ரேகவுடாவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று 50 பேரிடம் விசாரணை
அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் பா.ஜனதா பெண் பிரமுகரான திவ்யா தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு காரணமாக ஏற்கனவே தேர்வு எழுதிய 545 பேரிடமும் விசாரணை நடத்தி தகவல் பெறப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு ஆஜராகும்படி 50 பேருக்கு சி.ஐ.டி. போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story