வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.
மணப்பாறை:
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாமல் தடைபட்ட நிலையில், இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நேற்று பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியுள்ளது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து மணப்பாறை நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பூத்தட்டுகளுடன் தப்பாட்டம், செண்டை மேளம் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நீண்ட வரிசையில் நின்று மாலை முதல் நள்ளிரவு வரை அம்மனுக்கு பூக்களை படைத்து வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து மணப்பாறை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் ரதங்கள் அனைத்தும் முனியப்பன் கோவிலை வந்தடைந்து. பின்னர் அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாரியம்மன் கோவிலை அடைந்ததும், அம்மனுக்கு பூ போட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனின் உருவம் தாங்கிய ரதங்களின் அணிவகுப்பு அனைவரையும் ஈர்த்தது. இந்த வழிபாட்டில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மேலும் ரதங்கள் செல்லும் பகுதிகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என திருவிழா களை கட்டியது. பூச்சொரிதல் விழாவினைத் தொடர்ந்து வருகிற மே மாதம் 1-ந் தேதி, காப்பு கட்டுதல் விழாவும், முக்கிய விழாக்களான பால்குட விழா 15-ந் தேதியும், வேடபரி விழா 16-ந் தேதியும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story