சுமை தூக்கும் தொழிலாளி அடித்துக்கொலை?


சுமை தூக்கும் தொழிலாளி அடித்துக்கொலை?
x
தினத்தந்தி 25 April 2022 4:14 AM IST (Updated: 25 April 2022 4:14 AM IST)
t-max-icont-min-icon

சுமை தூக்கும் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலைக்கோட்டை:

தாக்குதல்
திருச்சி இ.பி. ரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகன் கேசவன் என்ற சக்திவேல்(வயது 28). இவரும், இவரது தம்பி சுதாகரும் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் அண்ணாநகர் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில் கடந்த ஒரு மாதமாக மராமத்து பணி செய்து வருவதால், அருகே சத்தியமூர்த்தி நகரில் உள்ள பொதுக்கழிப்பிடத்திற்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சக்திவேல் சென்றுள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயபால், அவரது மகன்கள் வெற்றிதாசன், கண்ணதாசன் ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக சக்திவேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த சக்திவேலை, அவரது தம்பி சுதாகர் மற்றும் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கொலையா?
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், சக்திவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளார். இது குறித்து சுதாகர் கோட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயபால், அவரது மகன்கள் கண்ணதாசன், வெற்றிதாசன் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டதில் சக்திவேல் இறந்தாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னரே தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Next Story