தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு வலைவீச்சு
தொழிலாளி கொலை வழக்கில் 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜீயபுரம்:
திருச்சி மாவட்டம் கொடியாலம் பகுதியில் உள்ள சுப்பராயன்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 47). இவர் நேற்று முன்தினம் குழுமணியில் உள்ள மெக்கானிக் கடையில் தனது மோட்டார் சைக்கிளை பழுது பார்க்க சென்றபோது 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து இந்த கொலை சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற பாலனின் மகன் வீரபாகு, முருகேசனின் மகன் பிரசாந்த், சிவனேசன் என்ற சிவா, ரவியின் மகன் சம்பத்குமார், கரூர் மாவட்டம் கவுண்டம்பட்டி அருகே உள்ள குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஹரி, மேலப்பட்டி பகுதியை சேர்ந்த தர்மராஜ் மகன் திருநாவுக்கரசு, கோப்பு கிராமத்தைச் சேர்ந்த அசோக் ஆகியோர் சம்பந்தப்பட்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரவிச்சந்திரனின் மகன் அரவிந்தனிடம், வீரபாகு, பிரசாந்த், விக்கி, சிவா ஆகியோர் மீன்பிடித்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும், இதில் அரவிந்தன் மற்றும் ரவிச்சந்திரனை அவர்கள் தாக்கியதாகவும், இதையடுத்து ரவிச்சந்திரன் கோவிலுக்கு சென்று சாபமிட்டதாகவும் கூறப்படுகிறது. சில நாட்கள் கழித்த நிலையில் விக்கி சாலை விபத்தில் இறந்துள்ளார்.
இதனால் ரவிச்சந்திரன் மீது ஆத்திரத்தில் இருந்த வீரபாகு உள்ளிட்டோர் அவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் தலைமறைவாக உள்ள 7 பேரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே ரவிச்சந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story