ஜம்பேரியில் மீன்பிடி திருவிழா
ஜம்பேரியில் மீன்பிடி திருவிழா நடந்தது.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிப்பாளையம், கோட்டப்பாளையம் ஊராட்சிகளில் உள்ள ஜம்பேரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில், இப்பகுதியின் மிகப்பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. கொல்லிமலை, புளியஞ்சோலை, அய்யாற்று நீரை நீராதாரமாக கொண்ட இந்த ஏரி, அய்யாற்றில் நீர் வரத்து குறைந்ததால் வறண்டு போகும் நிலைக்கு வந்தது.
இதையடுத்து சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டை கருதி, ஏரியில் உள்ள மீன்களை பிடிக்க நேற்று காலை 8 மணியளவில் மீன்பிடி திருவிழா நடத்துவதாக, ஊராட்சி நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பே அறிவித்தது. இதன்படி ஜம்பேரியில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மீன்பிடிக்க வலை முதலான கருவிகளுடன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் ஏரிப்பகுதியில் குவிந்தனர். மேலும் அவர்கள் அறிவிப்பு நேரத்தை பொருட்படுத்தாமல் நேற்று அதிகாலை முதலே மீன் பிடிக்க தொடங்கினர். மீன் வளமிக்க இந்த ஏரியில் கெண்டை, விரால், அயிரை, கெழுத்தி, ஆறா முதலான மீன் வகைகள் பிடிபட்டன. இருப்பினும் கடந்த வருடம் போல் இந்த வருடம் மீன்கள் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் புலம்பியபடி சென்றனர். மேலும் மீன்பிடி திருவிழா பற்றி அறிந்து தம்மம்பட்டி, துறையூர், உப்பிலியபுரம் போன்ற பகுதிகளில் இருந்து தாமதமாக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story