போலீசார் தாக்கியதாக ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை


போலீசார் தாக்கியதாக ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 25 April 2022 5:15 PM IST (Updated: 25 April 2022 5:15 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி அருகே போலீசார் தாக்கியதால் அவமானம் தாங்காமல் வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இந்த சம்பவத்தால் காட்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காட்பாடி

காட்பாடி அருகே போலீசார் தாக்கியதால் அவமானம் தாங்காமல் வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இந்த சம்பவத்தால் காட்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பிரம்மபுரம் காலனியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் விஜய் (வயது 26). பெயிண்டர் வேலை செய்து வந்தார். நேற்று காலை பிரம்மபுரம் ரெயில்வே கேட் அருகே ரெயில் முன்பு பாய்ந்து விஜய் தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்க முயன்றனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த விஜயின் உறவினர்கள் அவரது உடலை மீட்க விடாமல் போலீசாரை தடுத்து நிறுத்தினர். மேலும் வாலிபர் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

திடீர் சாலை மறியல்

மேலும் பிரம்மபுரம் பஸ்நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது சாலை மறியல் செய்தவர்கள் கூறுகையில் பிரம்மபுரத்தில் நேற்று (நேற்று முன்தினம்) கெங்கையம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு பெண் விஜய் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

போலீசார் தாக்கியதால்...

அங்கிருந்த விஜய்யை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்கினார். இதனால் அவமானம் தாங்காமல் விஜய் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவரைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பினர். இதனால் காட்பாடி திருவலம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாலிபர் தற்கொலை சம்பவம் தொடர்பாக புகார் அளியுங்கள். அதன் மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் தற்கொலை செய்துகொண்ட விஜயின் உடலை ரெயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபர் தற்கொலையால் அவருடைய உறவினர்கள் திடீர் சாலை மறியல் செய்த சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story