இரும்பு மேசைகளை உடைத்த தொரப்பாடி அரசு பள்ளி மாணவர்கள் 10 பேர் தற்காலிக நீக்கம்
இரும்பு மேசைகளை உடைத்த தொரப்பாடி அரசுப்பள்ளி பிளஸ்-2 மாணவர்கள் 10 பேரை தற்காலிகமாக நீக்கம் செய்து வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்
இரும்பு மேசைகளை உடைத்த தொரப்பாடி அரசுப்பள்ளி பிளஸ்-2 மாணவர்கள் 10 பேரை தற்காலிகமாக நீக்கம் செய்து வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இரும்பு மேசைகள் உடைப்பு
வேலூர் தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 800 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் சிலர் கடந்த 23-ந் தேதி வகுப்பறையில் உள்ள இரும்பு மேசைகளை தரையில் போட்டு அடித்து நொறுக்கியும், அவற்றின் மீது ஏறி நின்று உடைக்கும் காட்சிகள் முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இந்த சம்பவம் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தும்படி வேலூர் உதவி கலெக்டர் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
அதிகாரிகள் விசாரணை
அதன்பேரில் வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், வேலூர் தாசில்தார் செந்தில் ஆகியோர் பள்ளிக்கு சென்று உடைந்த மேசைகளை பார்வையிட்டனர். பின்னர் அவற்றை உடைத்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். மாணவர்களிடம் தனித்தனியாக அதிகாரிகள் விசாரணை செய்தனர். அதேபோன்று அந்த வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமியும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், பள்ளியில் பிரிவு உபசார விழாவுக்கு (பேர்வெல் பார்ட்டி) அனுமதி அளிக்காததால் பிளஸ்-2 மாணவர்கள் 10 பேர் இரும்பு மேசைகளை அடித்து உடைத்தது தெரிய வந்தது.
10 மாணவர்கள் நீக்கம்
இதையடுத்து பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் வேனில் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் இரும்பு மேசையை உடைத்தற்கான முகாந்திரம் குறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களின் பெற்றோரிடம் இதுகுறித்து உங்களுக்கு தெரியுமா?, வீடுகளில் உள்ள பொருட்களை இதுபோன்று உடைத்தால் அனுமதிப்பீர்களா? என்று கலெக்டர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் பள்ளிக்கு வந்த பின்னரே இந்த சம்பவம் பற்றி தெரியும். மாணவர்கள் செய்தது தவறுதான் என்று கூறினர்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறுகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு அனைத்து வசதிகளையும் இலவசமாக செய்து கொடுத்துள்ளது. பிரிவு உபசார விழாவுக்கு அனுமதி அளிக்காததால் மாணவர்கள் இரும்பு மேசையை உடைத்தோம் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10 மாணவர்களும் பள்ளியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி வரை பள்ளிக்கு வர தடை விதிக்கப்படுகிறது.
தேர்வு எழுத அனுமதி
மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்விற்கான ஹால்டிக்கெட்டை பெற்றோருடன் பள்ளிக்கு வந்து வாங்கி செல்ல வேண்டும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செய்முறை மற்றும் பொதுத்தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுகிறது. மாணவர்களால் உடைக்கப்பட்ட மேசை உள்ளிட்ட பொருட்களுக்கு அவர்களின் பெற்றோர் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவர்கள் ஒழுங்கீனமாக நடப்பதை தடுக்க பள்ளியில் ஒழுங்கு நெறிமுறைகளை போதிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்படும்.
மாணவர்கள் எக்காரணத்தை கொண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மீறி ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் தங்களின் படிப்பை முடித்து விட்டு பெற்றோருக்கும், சமுதாயத்துக்கும் நற்பெயர் வாங்கி கொடுக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story