சந்தேகத்தால் வெறிச்செயல்: மனைவியை பீர்பாட்டிலால் தாக்கி கொலை செய்ய முயன்ற கணவர்


சந்தேகத்தால் வெறிச்செயல்: மனைவியை பீர்பாட்டிலால் தாக்கி கொலை செய்ய முயன்ற கணவர்
x
தினத்தந்தி 25 April 2022 7:22 PM IST (Updated: 25 April 2022 7:22 PM IST)
t-max-icont-min-icon

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காலில் சூடு வைத்தும், பீர் பாட்டிலால் தலையில் தாக்கியும் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாவு கடை ஊழியர்

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 2-வது மெயின் ரோட்டில் வசிப்பவர் கமலக்கண்ணன் (வயது 30). இவர், ஆதம்பாக்கத்தில் உள்ள மாவு அரைக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வினிதா (28). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 10 மாதத்தில் குழந்தை உள்ளது. நேற்று நீண்ட நேரமாகியும் கமலக்கண்ணன் கடைக்கு வராததால் கடை உரிமையாளர் வைத்தீஸ்வரன், கமலக்கண்ணனை அழைத்து செல்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு கமலக்கண்ணன் இல்லை. வீட்டுக்குள் 10 மாத குழந்தையுடன், உடலில் ரத்த காயத்துடன் வினிதா மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வைத்தீஸ்வரன், ேபாலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

பீர் பாட்டிலால் தாக்கி சித்ரவதை

உடனடியாக ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு வினிதா தலை, கழுத்து, பகுதிகளில் ரத்த காயத்துடனும், தொடை பகுதியில் தீக்காயத்துடன் தனது 10 மாத குழந்தையுடன் வலியால் துடித்தபடி இருந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். பின்னர் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வினிதாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவருடன் தகராறு செய்த கமலக்கண்ணன், பீர் பாட்டிலால் வினிதாவின் தலையில் அடித்தும், கழுத்தை அறுத்தும், துணியால் அவரது வலது தொடையில் தீ வைத்தும் கொலை செய்யும் நோக்கத்துடன் சித்ரவதை செய்தது தெரியவந்தது.

இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கமலக்கண்ணனை தேடி வருகின்றனர்.


Next Story