காலத்தின் தேவைக்கேற்ப உயர்கல்வியை மாற்றி அமைக்க வேண்டும்


காலத்தின் தேவைக்கேற்ப உயர்கல்வியை மாற்றி அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 April 2022 8:09 PM IST (Updated: 25 April 2022 8:09 PM IST)
t-max-icont-min-icon

காலத்தின் தேவைக்கேற்ப உயர் கல்வியை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஊட்டியில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

ஊட்டி

காலத்தின்  தேவைக்கேற்ப உயர் கல்வியை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஊட்டியில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

துணைவேந்தர்கள் மாநாடு

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொள்ளும் 2 நாட்கள் மாநாடு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் இன்று காலை தொடங்கியது. 

இதன் முக்கிய நோக்கமாக புதிய உலகை கட்டமைப்பதில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் 2047-ம் ஆண்டில் உலக நாடுகளை வழிநடத்தும் நாடாக இந்தியா மாற வேண்டும் என்ற தலைப்பு குறித்து பேசப்பட்டது.  தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

உலக தலைமை

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. 2047-ம் ஆண்டுக்குள் நமது நாடு உலக தலைமை நாடாக இருக்க வேண்டும். எனவே நாட்டின் சிந்தனை தலைவர்களான துணைவேந்தர்கள் நமது கல்வி முறையின் மறுமலர்ச்சிக்கான யோசனைகள் மற்றும் புதுமையான செயல் திட்டங்களை கொண்டுவர நடவடிக்க எடுக்க வேண்டும். 

நமது இளைஞர்கள் அதிக நம்பிக்கையுடனும், போட்டியிட்டு வெற்றி பெறவும், அதிக திறன் கொண்டவர்களாக மாறுவதை உறுதி செய்வோம்.
நமது பிரதமரின் தொலைநோக்கு பார்வை மற்றும் தலைமையின் கீழ் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற முழக்கத்துடன், ஒவ்வொரு குடிமகனும் வளர்ச்சிக்கான பாதையில் தீவிரமாக பயணிப்போம்.

வளர்ச்சி

அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியுடன், நமது தேசம் ஒன்றுபட்ட புகழ்பெற்ற இந்தியாவாக உருவாகி வருகிறது. அதன் பலன்களை சரியான முறையில் மக்கள் பெற்று வருகிறார்கள். 

ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு, தங்குமிடம், சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் போன்ற ஆரோக்கியமான குடியுரிமைக்கான அத்தியாவசிய தேவைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.  2014-ம் ஆண்டில் புதிய தேசிய தலைமை வந்ததன் காரணமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மதம், இனம் அடிப்படையில் நாட்டை பிரிவினையாக்கும் துணைத்தலையீடுகளை அகற்றி வருகிறோம். பிரதமரின் நடவடிக்கையால் சமூக பதற்றங்களுக்கு இடமளிக்காமலும், பிளவுகள் ஏற்படாமலும் பாதுகாக்கப்படுகிறது.

காலத்தின் தேவை

குடிமக்கள் அனைவரையும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என பார்க்கப்படுகிறது. எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து குடிமக்களையும் நன்மைகள் சென்றடைகிறது. கடந்த 7 ஆண்டுகளில் நாட்டில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா புரட்சி மற்றும் ஜன்தன் யோஜனாவின் புரட்சிகரமான திட்டங்கள் மூலம் 450 மில்லியனுக்கும் அதிகமான குடிமக்கள் வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளனர். சுகாதாரத்துறையில் மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவக் காப்பீட்டை உறுதி செய்வதற்காக ஆயுஷ்மான் திட்டம் நல்ல பலனை தந்துள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் பொது மருந்துகள் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மூலம் இளைஞர் சக்தி ஒருங்கிணைக்கப்படுகிறது. ஸ்டார்ட்-அப் துறையில் உலகின் முதல் மூன்று இடங்களில் இந்தியா உள்ளது. காலத்தின் தேவைக்கு ஏற்ப உயர் கல்வியை மாற்றி அமைக்க வேண்டும். மாணவர்கள் பன்முக திறமை மிக்கவர்களாக உருவாக்கப்பட வேண்டும் அதற்கு பல்கலைக்கழகங்கள் புதிய செயல்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இந்த மாநாடு இதற்கு வழிவகை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

பல்கலைக்கழக மானிய குழு தலைவர்

பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் பேசும் போது கூறியதாவது:-உயர்கல்வித் துறையை மாற்றியமைக்கவும், குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களை திறமைமிக்கவர்களாக மாற்றுவதற்கு மத்திய மானியக் குழு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

கிராமப்புற பின்னணியுடன் வலுவான மற்றும் முற்போக்கான இந்தியாவை கட்டியெழுப்புவதில் மாணவர்கள் நாளைய தேசத்தின் தூண்கள். மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து தொழில்நுட்பங்களையும் அவர்களுக்கு வழங்குவது தலையாய கடமை. நாட்டில் 70 சதவீத மாணவர்கள் கலைப் படிப்பை மேற்கொள்கின்றனர். அறிவியலும் வணிகமும் வேலைகளைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றன. தேசிய கல்விக் கொள்கையின் மூலம் கல்வி முறையை மாற்றுவதற்கான செயல் புள்ளிகளைக் கொண்ட ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

மாநாட்டில்  ஜோஹோ நிறுவன தலைமை செயல் அலுவலரும், ஸ்ரீதர் வேம்பு,  தமிழக கவர்னரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த்ராவ் பட்டீல் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதா சேைஷயன், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெயக்குமார், 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி,  கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ்,  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்்கழக துணைவேந்தர் செல்வம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன் உள்ளிட்ட பல்வேறு துணை வேந்தவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் நிகழ்ச்சி தொடங்கும் முன்பாக  ராஜ்பவன் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Next Story