ஓவேலி பேரூராட்சி கவுன்சிலர்களுடன், ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை
கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுவது தொடர்பாக ஓவேலி பேரூராட்சி கவுன்சிலர்களுடன், ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை நடத்தினார்.
கூடலூர்
கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுவது தொடர்பாக ஓவேலி பேரூராட்சி கவுன்சிலர்களுடன், ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை நடத்தினார்.
சட்டப்பிரிவு-17 வகை நிலங்கள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓவேலி பேரூராட்சியில் சட்டப்பிரிவு-17 வகை நிலங்கள் உள்ளது. இங்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஓவேலி பேரூராட்சி பகுதிக்கு சிமெண்டு உள்ளிட்ட கட்டுமான பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.
இதுபோன்று சமீபத்தில் நடந்த நிகழ்வின்போது, வனத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தடையை மீறி ஓவேலி பேரூராட்சி கவுன்சிலர் ஷாஜி மற்றும் பொதுமக்கள் கட்டுமான பொருட்களை தலையில் சுமந்து கொண்டு சென்றனர்.
பேச்சுவார்த்தை
இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் தலைமை தாங்கினார். தாசில்தார் சித்தராஜ், உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் அடங்கிய அதிகாரிகளுக்கும், ஓவேலி பேரூராட்சி மன்ற தலைவர் சித்ராதேவி, துணைத்தலைவர் சகாதேவன் மற்றும் கவுன்சிலர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது வீடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்குகூட சிறிய அளவில் கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இனிவரும் காலங்களில் மழைக்காலம் தொடங்க உள்ளதால், அதற்கு முன்பாகவே வீடுகளை சீரமைக்க வேண்டும். எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்று பேரூராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
உரிய தீர்வு
பின்னர் உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன் பேசும்போது, பொதுமக்களுக்கு எதிரானது வனத்துறை அல்ல. காட்டுயானைகளிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியை செய்து வருகிறோம். சட்டப்பிரிவு-17 வகை நிலங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சட்டரீதியாக அணுக வேண்டும். அதுபோன்று முறையாக அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்றார்.
தொடர்ந்து ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் கூறும்போது, சட்டம் மற்றும் அதன் வழிமுறைகளை கடைபிடிப்பதே அதிகாரிகளின் பணி. இருப்பினும் பேரூராட்சி மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும். அதுவரையில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story