தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- தங்கபாலு


தங்கபாலு
x
தங்கபாலு
தினத்தந்தி 26 April 2022 12:15 AM IST (Updated: 25 April 2022 8:25 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா ஆளும் மாநிலங்களைப்போல் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு கூறினார்.

மன்னார்குடி:-

பா.ஜனதா ஆளும் மாநிலங்களைப்போல் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு கூறினார். 

உப்பு சத்யாகிரக நினைவு பாதயாத்திரை 

வேதாரண்யம் உப்பு சத்யாகிரக நினைவு பாதயாத்திரை காங்கிரஸ் சார்பில் திருச்சியில் இருந்து கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இந்த பாத யாத்திரை குழுவினர் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமையில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி வந்தனர். 
அப்போது தங்கபாலு, மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை கிழக்குமாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்ட பாத யாத்திரை குழுவினருக்கு மன்னார்குடி நகர, வட்டார காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன், நகர காங்கிரஸ் தலைவர் கனகவேல், மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி, மாவட்ட செயலாளர் சங்கு கோபால், வட்டார தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வடுகநாதன், குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

விலைவாசி உயர்வு

நிகழ்ச்சியை ெதாடர்ந்து தங்கபாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ளபோதும் பெட்ரோல், டீசலை கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். தற்போது இந்தியாவில் ஒரு லிட்டல் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது. 
அதேநேரத்தில் விலைவாசி விஷம் போல் ஏறி வருகிறது. மத்திய அரசு விதிக்கும் அதிகப்படியான வரியால் மக்கள் துயரத்துக்கு ஆளாகின்றனர். 

ஒத்துழைப்பு

மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் வழங்கவில்லை. தமிழகத்துக்கான நிலக்கரியையும் மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் தான் மின்வெட்டு ஏற்படுகிறது. மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதை கைவிடவேண்டும். 
பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு எப்படி ஒத்துழைப்பு வழங்குகிறதோ, அதைப்போல் தமிழக அரசுக்கும் மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழகத்துக்கு உரிய நிலக்கரியையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story