கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் லாபுராம்
உப்பள்ளி கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் லாபுராம் தெரிவித்துள்ளார்.
உப்பள்ளி:
உப்பள்ளி கலவரம்
தார்வார் மாவட்டம் உப்பள்ளி பழைய உப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு வழிப்பாட்டுதலத்தில் காவி கொடி பறக்கவிட்டது போன்ற வீடியோவை வாலிபர் ஒருவர் வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து குறிப்பிட்ட சமுதாயத்தினர் வாலிபரை தங்கள் வசம் ஒப்படைக்க கோரி பழைய உப்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி போலீசார், போலீஸ் நிலையம் மற்றும் இந்து கோவில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு நின்ற வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
146 பேர் கைது
உப்பள்ளி கலவரத்தில் இதுவரை 146 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டவர்கள் முதல் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
உப்பள்ளி கலவரம் தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் லாபுராம் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
பாரபட்சமின்றி நடவடிக்கை
உப்பள்ளி கலவரம் தொடர்பாக இதுவரை 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் ரவுடி ஆவார்கள். மேற்கொண்டு கைதானவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. கலவரத்திற்கு மூளையாக செயல்பட்ட மத குருவான வாசிம் பதான் உள்ளிட்டோர் போலீஸ் காவல் விசாரணையில் உள்ளனர். இந்த வழக்கில் கவுன்சிலர் ஒருவரும் கைதாகி உள்ளார். காங்கிரஸ் பிரமுகர் அல்தாப் உள்பட சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உப்பள்ளி கலவரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் மதம், அரசியல் என எந்த பாகுபாடும் காட்ட போவது இல்லை. தற்போது இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால் கூடுதல் தகவல்களை வழங்க முடியாது. விசாரணை முடிந்த பின்னர் முழு விவரங்களும் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story