ரெயில் முன் பாய்ந்து நர்ஸ் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து நர்ஸ் தற்கொலை
x
தினத்தந்தி 25 April 2022 9:40 PM IST (Updated: 25 April 2022 9:40 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ரெயில் முன் பாய்ந்து நர்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி:
நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி நேற்று காலை பாசஞ்சர் ரெயில் வந்தது. இந்த ரெயில் காலை 9 மணி அளவில் தூத்துக்குடி-மீளவிட்டான் ரெயில் நிலையங்களுக்கு இடையே 4-ம் கேட் பகுதியில் வந்தது. அப்போது ஒரு இளம்பெண் திடீரென ரெயில் முன் பாய்ந்து அடிபட்டு இறந்துவிட்டதாக தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் தர்மபெருமாள் தலைமையில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு இளம்பெண் ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்து இறந்து கிடந்தார். தொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் தூத்துக்குடி அண்ணா நகர் 2-வது தெருவை சேர்ந்த சங்கரன் மகள் காமாட்சி (வயது 22) என்பது தெரியவந்தது. மேலும் பரபரப்பு தகவலும் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

காமாட்சி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிப்ளமோ நர்சிங் முடித்து விட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 ஆண்டுகளாக நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காமாட்சி, அதே பகுதியில் வசித்து வந்த மெக்கானிக் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் பிரிந்து விட்டனர். இதனால் அந்த மெக்கானிக் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி காமாட்சி வேலைக்கு செல்வதற்காக தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அந்த மெக்கானிக்கின் மனைவி, காமாட்சியிடம் எனது கணவரிடம் ஏன் பேசுகிறாய் என்று கூறி தகராறு செய்தார். 

தொடர்ந்து காமாட்சியிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு சென்று விட்டார். இதனால் மனஉளைச்சல் அடைந்த காமாட்சி நேற்று முன்தினம் தனது தந்தையுடன் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று தனது செல்போனை கேட்டு உள்ளார். அப்போது அந்த பெண், காமாட்சியை தாக்கி செல்போனை கொடுக்க மறுத்து விட்டார். அதன்பிறகு காமாட்சி தனது தந்தையிடம் வீட்டுக்கு செல்லுமாறு கூறிவிட்டு, தான் செல்போனை வாங்கி வருவதாக கூறி உள்ளார். இதனால் சங்கரன் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் காமாட்சி அங்கிருந்து புறப்பட்டு ரோச் பூங்கா அருகே சென்று தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார். உடனே அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சங்கரன் தனது மகளை காணவில்லை என்று தேடி வந்தார். அப்போது அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் அறிந்து அங்கு சென்று உள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த காமாட்சி நேற்று காலையில் யாருக்கும் தெரியாமல் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி, தூத்துக்குடி 4-ம் கேட் அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து உள்ளார். இவ்வாறு போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story