மீனவருக்கு நிதி நிறுவனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
கடன் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்ட மீனவருக்கு நிதி நிறுவனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாகை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வெளிப்பாளையம்:
கடன் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்ட மீனவருக்கு நிதி நிறுவனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாகை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடன் கேட்டு விண்ணப்பம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன். மீனவரான இவர் பைபர் படகு மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். தனது தொழிலை மேம்படுத்த விசைப்படகு வாங்குவதற்காக வேதாரண்யத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இதற்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான சொத்தை அடமானம் வைக்க வேண்டும் என அந்த நிதி நிறுவனம் தெரிவித்ததாக தெரிகிறது.
அதன்பேரில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி முனீஸ்வரன் கடன் ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் பூர்த்தி செய்யாத மூன்று காசோலைகளில் கையெழுத்திட்டு தனியார் நிதி நிறுவனத்திடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கடன் பெறுவதற்காக ஆவணங்கள் பூர்த்தி செய்ய ரூ.26 ஆயிரத்து 150 செலுத்தியதாக தெரிகிறது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் அந்த நிறுவனத்தில் இருந்து கேட்ட கடன் தொகை அவருக்கு வழங்கவில்லை.
ரூ.10 லட்சம் இழப்பீடு
சொத்து பத்திரத்தை அடமானம் வைக்கப்பட்டதால் வேறு வங்கியில் கடன் வாங்க முடியாத நிலையில் முனீஸ்வரன் மன உளைச்சல் அடைந்துள்ளார். இதனால் கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந் தேதி தனக்கு ஏற்பட்ட சேவை குறைபாடு, மன உளைச்சல் மற்றும் மோசடி செய்தமைக்காக நிதி நிறுவனம் ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நாகை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் செய்தார்.
இந்த புகார் மனு, நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர்கள் சிவகாமிசெல்வி, கமல்நாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதையடுத்து சேவை குறைபாட்டால் முனீஸ்வரனுக்கு கால விரயம், பொருள் விரயம், வருமான இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தியமைக்காக அவருக்கு தனியார் நிதி நிறுவனம் ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் அடமானம் வைக்க ஆவணங்கள் தயார் செய்ய கொடுத்த தொகை ரூ.26 ஆயிரத்து 150-ஐ திரும்ப வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story