4 நாட்களாக மின்வெட்டு இல்லை- மந்திரி நிதின் ராவத் கூறுகிறார்
மராட்டியத்தில் கடந்த 4 நாட்களாக மின்வெட்டு இல்லை என மந்திரி நிதின் ராவத் கூறியுள்ளார்.
நாக்பூர்,
மராட்டியத்தில் கடந்த 4 நாட்களாக மின்வெட்டு இல்லை என மந்திரி நிதின் ராவத் கூறியுள்ளார்.
20 மாநிலங்களில் மின்தடை
கோடைக்காலத்தில் மின் உபயோகம் அதிகரித்ததாலும், போதிய நிலக்கரி வினியோகம் இல்லாததாலும் மாநிலத்தில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் மராட்டியத்தில் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது.
இந்த நிலையில் மின்சாரத்துறை மந்திரி நிதின் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நிலக்கரி பற்றாக்குறையால் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மின்தடை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மராட்டியத்தில் கடந்த 3 முதல் 4 நாட்களாக மின்வெட்டு இல்லை.
இன்று மின் தேவை 27 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி உள்ளது. இருப்பினும் மின் வினியோக நிறுவனமான மகா விதரனுக்கு 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை மகாஜென்கோ (மின் உற்பத்தி நிறுவனம்) வழங்கி உள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டை சமாளிக்க நாங்கள் மைக்ரோ-லெவல் திட்டமிடலை செய்துள்ளோம். மேலும் நிலைமை குறித்து மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கு தெரிவித்து வருகிறோம்.
சுரங்கம் ஒதுக்கல்
நிலக்கரி தேவைக்கும், வினியோகத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை சரிசெய்யும் பணியில் நிலக்கரி நிறுவனங்களும், மத்திய அரசும் ஈடுபட்டு வருகின்றன.
வரவிருக்கும் நாட்களில் நமது அரசின் பிரதிநிதிகள், மத்திய நிலக்கரித்துறை மந்திரி மற்றும் ரெயில்வே மந்திரியை சந்தித்து நிலக்கரி வினியோக பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளனர்.
மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் சத்தீஸ்கார் மாநிலத்தின் ராய்கர் மாவட்டத்தில் கரே பால்மாவில் நிலக்கரி சுரங்கம் மகாஜென்கோவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கமானது மாநிலத்தில் மின் உற்பத்திக்காக நிலக்கரி ஆதாரமாக இருக்கும். நிலக்கரிக்காக நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தை குறைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story