ரூ.174 கோடியில் பாதாள சாக்கடை விரிவுபடுத்தும் திட்டம்
திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.174 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்:
ரூ.174 கோடியில் பாதாள சாக்கடை
திண்டுக்கல் மாநகராட்சியில் 22 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள 26 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இதற்காக ரூ.174¼ கோடி மதிப்பில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மேயர் இளமதி தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்தார்.
இதில் கமிஷனர் சிவசுப்பிரமணியன், என்ஜினீயர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள், பொதுமக்கள் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:-
கணேசன் (மா.கம்யூ) :- பாதாள சாக்கடை திட்டத்தில் பல குழப்பம் உள்ளது. இணைப்பு பெறாத வீட்டுக்கு கட்டணம் செலுத்தும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. மழைக்காலத்தில் வீட்டுக்குள் கழிவுநீர் வருகிறது. அதை முதலில் சரிசெய்ய வேண்டும்.
ஆனந்த் (தி.மு.க.):- பாதாள சாக்கடை தற்போது பயன்பாட்டில் இருக்கும் இடங்களில் வீட்டு இணைப்பில் குழாய்கள் சேதமடைகின்றன. அதை சரிசெய்ய வேண்டும். புதிய திட்டத்தில் தரமான குழாய்களை பதிக்க வேண்டும்.
ஜோதிபாசு (மா.கம்யூ) :- பாதாள சாக்கடை இணைப்புக்கு சிறிய குழாய்கள் பயன்படுத்துவதால் அடிக்கடி சேதம் அடைகிறது. அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை. எனவே தரமான, பெரிய குழாய்களை பயன்படுத்த வேண்டும்.
உள்ஒப்பந்தம் கூடாது
தனபாலன் (பா.ஜனதா):- பாதாள சாக்கடை பணி ஒரே ஒப்பந்ததாரரிடம் மட்டுமே வழங்க வேண்டும். உள்ஒப்பந்தம் விடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அதன்மூலம் பணிகளை விரைவாக முடிக்கலாம். மேலும் கழிவுநீர் குழாய்கள் சந்திக்கும் தொட்டியை உறுதியாக கட்ட வேண்டும்.
ஜான்பீட்டர் (தி.மு.க.) :- கடினமான பாறைகள் உள்ள பகுதிகளில் பொதுமக்களிடம் பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனால் பொதுமக்களின் ஒத்துழைப்பை பெறலாம்.
கார்த்திக் (காங்கிரஸ்):- திண்டுக்கல் பஸ்நிலைய பகுதியில் தினமும் பாதாள சாக்கடை கசிவு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் செல்கிறது. எனவே பழைய இணைப்புகளில் உள்ள குறைகளை முதலில் சரிசெய்ய வேண்டும்.
பாஸ்கரன் (அ.தி.மு.க.):- திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்கனவே தோல்வி அடைந்தது. தற்போது விடுபட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதால் மக்களுக்கு வரி சுமை ஏற்படும். எனவே திட்டத்தை நன்கு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். மேலும் கூட்ட அரங்கில் எம்.ஜி.ஆர். மாமன்ற கூடம் எனும் எழுத்தில் பேனர் வைத்து மறைக்கப்பட்டு உள்ளது.
ஜெயந்தி (தி.மு.க.):- பாதாள சாக்கடை திட்டம் அ.தி.மு.க. காலத்தில் தான் தோல்வி அடைந்தது.
உமாதேவி (அ.தி.மு.க.) :- 31-வது வார்டில் ஒருசில பகுதியில் குடிநீர் முறையாக வருவதில்லை. அதை சரிசெய்து தரவேண்டும்.
விஜயகுமார்:- பாதாள சாக்கடை பராமரிப்புக்கு ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் குழாய் உடைப்பு, கசிவு சரிசெய்யப்படுவது இல்லை. இதற்கிடையே பிற வார்டுகளில் அமைக்கப்பட இருக்கிறது. பாதாள சாக்கடை பிரச்சினைகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.
பாதாள சாக்கடையில் பிரச்சினை ஏன்?
கமிஷனர்:- பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றும் நிறுவனமே பராமரிப்பை மேற்கொள்ளும் என்பதால் சிரமம் இருக்காது.
ஆசாத்:- பாதாள சாக்கடை பணிகளை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும். அதோடு தலா 5 வார்டுகள் வீதம் பணியை மேற்கொண்டால் மக்கள் சிரமப்படுவதை தடுக்கலாம். குடிநீர் குழாய் சேதமாவதை தவிர்க்க வேண்டும்.
மேயர்:- பாதாள சாக்கடை திட்டம் குறித்து கவுன்சிலர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் அளித்த கருத்துகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். மேலும் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
துணை மேயர்:- திண்டுக்கல்லுக்கு 1966-ல் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது பாறைகள் இருப்பதால் நிறைவேற்ற முடியாது என்று கூறிவிட்டனர். அதன்பின்னர் 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அதில் 80 சதவீத பணிகள் நிறைவுபெற்ற நிலையில் ஆட்சி மாறியது. மீதமுள்ள 20 சதவீத பணிகளை அ.தி.மு.க. ஆட்சியில் சரியாக செய்யாததால், பிரச்சினை ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. கண்டுகொள்ளவில்லை. தற்போது விடுபட்ட பகுதிகளுக்கும் தி.மு.க. ஆட்சியில் திட்டம் விரிவுபடுத்தப்படஉள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேற்கண்டவாறு பலரும் கருத்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story