குழந்தைகளுக்கு கொடுக்க பால், பிஸ்கெட் கூட கிடைக்கவில்லை-ராமேசுவரம் வந்த இலங்கை அகதிகள் கண்ணீர் பேட்டி
குழந்தைகளுக்கான பால், பிஸ்கெட் கிடைக்காததால் குழந்தைகளின் உயிரை காப்பாற்றி கொள்வதற்காகவே படகு மூலம் ராமேசுவரம் வந்ததாக இலங்கை அகதிகள் கூறினர்.
ராமேசுவரம்
குழந்தைகளுக்கான பால், பிஸ்கெட் கிடைக்காததால் குழந்தைகளின் உயிரை காப்பாற்றி கொள்வதற்காகவே படகு மூலம் ராமேசுவரம் வந்ததாக இலங்கை அகதிகள் கூறினர்.
சாப்பாட்டுக்கு வழியில்லை
இலங்கையிலிருந்து ஒரே நாளில் நேற்று 5 குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகளுடன் 15 பேர் அகதிகளாக ராமேசுவரம் வந்தனர். அவர்கள் இலங்கையிலிருந்து தாங்கள் வந்ததற்கான காரணம் குறித்து கண்ணீருடன் கூறினார். யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த பேபி ஷாலினி(வயது 22) கூறியதாவது:-
இலங்கையில் விலைவாசி உயர்வால் மக்கள் அதிகமாக கஷ்டப்பட்டு வருகின்றனர். அரிசி ஒரு கிலோ 300 ரூபாய், சீனி 300 ரூபாய், காய்கறிகள் 300 லிருந்து 500 வரை, பருப்பு 300 ரூபாய் குழந்தைகளுக்கான பால் பவுடர் என அனைத்து பொருட்களின் விலையும் அதிகமாகவே உள்ளது. பணம் கொடுத்தாலும் பொருட்கள் கிடைப்பதில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் குழந்தையுடன் தவித்து வந்தோம். உயிர் வாழ்வதற்காகவே நகையை விற்று படகு மூலம் இங்கு வந்துள்ளோம் .இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு இலங்கை பெண் விதுரா(24) கூறியதாவது:-
இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பணம் கொடுத்தாலும் பொருட்கள் கிடைப்பதில்லை. 2 குழந்தையுடன் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வந்தோம். குழந்தைகளை காப்பாற்றி உயிருடன வாழவே குழந்தையின் கழுத்தில் இருந்த அரை பவுன் தங்க நகையை விற்று அந்த பணத்தை படகோட்டிக்கு கொடுத்து அங்கிருந்து தப்பி வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பால் கிடைக்கவில்லை
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிரோசன்(24) கூறும்போது, இலங்கையில் தற்போது உள்ள பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் அங்கு வாழவே முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 300 ரூபாய், மண்ணெண்ணெய் 150 ரூபாய், அரிசி 300 ரூபாய், காய்கறிகள் கிலோ 500 ரூபாய், பிரட் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட் ரூ.100 என அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. அங்கு வேலை வாய்ப்பும் இல்லாததால் குழந்தையுடன் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு வந்தோம். அதனால் தான் மனைவி, குழந்தையுடன் இங்கு வந்துள்ளோம் என்றார்.
வைத்தீஸ்வரி கூறும்போது, இலங்கையில் குழந்தைக்கு தேவையான பால் பவுடர், பிஸ்கட் பாக்கெட், பால் பாக்கெட் கூட கிடைப்பது கிடையாது. அப்படியே கிடைத்தாலும் அந்த பொருட்கள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. குழந்தைகளுக்கான பால்பவுடர் ரூ.800-க்கு விற்கப்படுகிறது. பால் பாக்கெட் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. குழந்தைகளின் உயிரை காப்பாற்றவே நகையை விற்று கிடைத்த பணத்தை வைத்து படகு மூலம் இங்கு தப்பி வந்துள்ளோம் என்றார்.
Related Tags :
Next Story